- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள சாய் சுதர்சன் – அவருக்கு பதிலாக இடம்பெறப்போவது யார்?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் அவர் இதுவரை பெரியளவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்கிற விமர்சனம் அவர் மீது எழுந்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் நீக்கப்பட வாய்ப்பு :

இங்கிலாந்து மண்ணில் ஆடுகளங்கள் சவாலாக இருந்ததால் அவர் சுமாராக செயல்பட்டதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பினை தொடர்ச்சியாக தவறவிட்டு வரும் சாய் சுதர்சன் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதேவேளையில் அவருக்கு பதிலாக மூன்றாம் இடத்தில் அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட கர்நாடகவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான தேவதத் படிக்கல்லுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக இடம் பிடித்து வரும் அவர் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

- Advertisement -

அதேபோன்று இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக கடந்த மாதம் விளையாடிய போட்டியின் போது அவர் சதம் அடித்து அசத்தியிருந்தார். ஏற்கனவே இந்திய அணிக்காக சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக ஆடும் திறன் கொண்டவர் என்பதனால் தற்போது அவருக்கு ஒரு பிரமோஷன் கொடுத்து டாப் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் களமிறக்க இந்திய அணி யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : டாப் 5-ல் இருந்து வெளியேறிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.. முன்னேற்றம் கண்ட முகமது சிராஜ் – விவரம் இதோ

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக படிக்கல் விளையாட அதிக வாய்ப்புள்ளது. தமிழக வீரரான சாய் சுதர்சன் இந்த ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் மட்டுமே அடித்து 147 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -