ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி கொல்கத்தாவில் 39வது போட்டி நடைபெற்றது. அதில் கொல்கத்தாவை 39 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்த குஜராத் தங்களுடைய 6வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அதிகபட்சமாக கேப்டன் கில் 90, சாய் சுதர்சன் 52 ரன்கள் எடுத்த உதவியுடன் 199 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய கொல்கத்தா ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 159/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரகானே 50 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக ரசித் கான், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் காரணமாக கொல்கத்தா தங்களுடைய 5வது தோல்வியைப் பதிவு செய்தது.
சாய் கிசோர் அசத்தல்:
இந்த வெற்றியில் சாய் சுதர்சன் போலவே மற்றொரு தமிழக வீரர் சாய் கிஷோர் 3 ஓவரில் 19 ரன்களை மட்டும் கொடுத்து வெங்கடேஷ் ஐயர் விக்கெட்டை எடுத்து பங்காற்றினார். முன்னதாக குஜராத் அணி நம்பிக்கை நட்சத்திரம் ரசித் கான் சமீபத்திய போட்டிகளில் தடுமாறி வந்தார். ஆனால் இந்தப் போட்டியில் 4 ஓவரில் 25 ரன்களை மட்டும் கொடுத்த அவர் ரசல் உட்பட 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் பங்காற்றினார்.
அப்படிப்பட்ட அவரை வர்ணனையாளர்கள் அறையில் யாரும் சந்தேகப்பட வேண்டாம் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் நைட் எழுப்பிய கேள்விக்கு சாய் கிஷோர் பதிலடி கொடுத்தார். மேலும் ஆண்ட்ரே ரசல் விக்கெட்டை முக்கிய நேரத்தில் எடுக்கப் பயன்படுத்திய திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச்சில் போதுமான அளவுக்கு உதவி கிடைத்தது. அதிலும் நாங்கள் பவுலிங் செய்த இரண்டாவது இன்னிங்ஸில் நிறைய உதவி கிடைத்தது”
நம்பர் ஒன் ரசித்:
“அது போன்ற ஆடுகளத்தில் 199 என்பது கட்டுப்படுத்துவதற்கு போதுமான இலக்காகும். ரசலுக்கு எதிராக கொஞ்சம் கோணத்தை மாற்றி பௌலிங் செய்ததே திட்டமாக இருந்தது. அப்போது தான் விலகல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அட்டாக் செய்ய வேண்டிய நேரத்தில் நான் பந்தை காற்றில் மெதுவாக வீசி டாப் எட்ஜ் பெற முயற்சித்தேன்”
இதையும் படிங்க: அதை நினைச்சு பயந்தா விழுந்துருவீங்க.. 199 சேசிங் செய்யாமல் கொல்கத்தா தோற்க இதான் காரணம்.. கேப்டன் ரஹானே
“ரசித் உலகின் சிறந்த டி20 கிரிக்கெட்டில் சிறந்த பவுலர். இந்தப் போட்டியில் விக்கெட்டுகளை எடுத்த அவருடைய திறனை நாங்கள் எப்போதும் சந்தேகப்பட்டதில்லை. வர்ணனையாளர்கள் அறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. இப்போதும் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலரான அவரை நாங்கள் நம்புகிறோம். நாங்கள் முடிவுகளைப் பற்றி பார்க்காமல் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதைப் பற்றி பேசுகிறோம். இன்று ஃபீல்டிங் துறையில் நன்றாக செயல்பட்ட நாங்கள் இன்னும் முன்னேற வேண்டிய விஷயங்களைப் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.



