TNPL 2022 : டிஎன்பிஎல் வரலாற்றில் யாராலும் உடைக்க முடியாத சாதனை படைத்த ஷாய் கிசோர் – உலக அளவிலும் புதிய வரலாறு

Sai Kishore TNPL
- Advertisement -

தரமான தமிழக இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6-வது சீசன் கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் 28 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஜூலை 22-ஆம் தேதி நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் மற்றும் திருப்பூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சேலத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக்கத்திற்கு தொடக்க வீரர்கள் கௌசிக் காந்தி 2 (5) ஜெகதீசன் 0 (2) என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த ராதாகிருஷ்ணன் 24 (28) ரன்களும் சாய் கிஷோர் 19 (26) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். போதாகுறைக்கு அடுத்து வந்த சதீஷ் 5 (9) சோனு யாதவ் 12 (11) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 65/6 என அந்த அணி 100 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சுருண்ட திருப்பூர்:
நல்லவேளையாக கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய சசிதேவ் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (29) ரன்களை குவித்ததால் தப்பிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 133/9 ரன்கள் எடுத்தது. திருப்பூர் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கிரிஸ்ட் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 134 என்ற சுலபமான இலக்கை துரத்திய திருப்பூருக்கு 10 (10) ரன்கள் எடுத்திருந்த தொடக்க வீரர் அரவிந்தை அவுட் செய்த இளம் சுழல்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் அடுத்து களமிறங்கிய ராஜ்குமாரை டக் அவுட் செய்து அசத்தினார்.

அதனால் 25/2 என சுமாரான தொடக்கம் பெற்ற அந்த அணிக்கு அடுத்து வந்த மான் பப்னா 9 (13) ரன்களிலும் மற்றொரு தொடக்க வீரர் ஸ்ரீகாந்த் அனிருத்தா 25 (26) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினர். அந்த நிலையில் வந்த துஷார் ரஹீஜா 11 (14) பிரான்சிஸ் ரோகின்ஸ் 8 (17) எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சேப்பாக்கத்தின் அனலான பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

கிசோரின் மயஜாலம்:
அதனால் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த திருப்பூர் வெறும் 73 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சேப்பாக்கம் பங்கேற்ற 7 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. சேப்பாக்கம் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளும் சந்தீப் வாரியார் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

குறிப்பாக 4 ஓவர்களை வீசிய சாய் கிஷோர் அதில் 3 ஓவர்களை மெய்டன் ஓவர்களாக வீசி வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து 0.50 என்ற அடிக்கவே முடியாத துல்லியமான எக்கனாமியில் பந்துவீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவருடன் பந்து வீசிய எஞ்சிய பவுலர்கள் குறைந்தது 10 ரன்களாவது கொடுத்த நிலையில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 மெய்டன் ஓவர்கள் வீசிய சாய் கிஷோர் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் டிஎன்பிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 3 மெய்டன் ஓவர்களை வீசிய முதல் பவுலர் என்ற சரித்திரத்தை அவர் எழுதிய அவர் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸ்சில் சிறந்த எக்கனாமியல் பந்துவீசிய பவுலர் என்ற சாதனையும் படைத்தார்.

- Advertisement -

1. சொல்லப்போனால் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டி20 போட்டியில் குறைந்த ரன்களை கொடுத்த இந்திய பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையையும் உலக அளவில் 2-வது பவுலர் என்ற பெருமையையும் சாய் கிசோர் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2018 கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் பார்படாஸ் அணிக்கு எதிராக செயின்ட் கிட்ஸ் அணிக்காக விளையாடிய பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமத் இர்பான் 3 மெய்டன் ஓவர்கள் உட்பட மொத்தம் வீசிய 4 ஓவர்களில் வெறும் 1 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட் எடுத்துள்ளதே ஒரு போட்டியில் ஒரு பவுலர் கொடுத்த குறைந்த ரன்களாகும்.

2. அவருக்குப் பின் 2-வது இடம் பிடித்துள்ள சாய் கிஷோர் உலக அளவில் ஒரு டி20 போட்டியில் 3 மெய்டன் ஓவர்கள் வீசி குறைந்த ரன்களை கொடுத்த முதல் சுழல்பந்து வீச்சாளர் என்ற மகத்தான பெருமையும் பெற்றுள்ளார்.

என்னதான் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசினாலும் 3 ஓவர்களை மெய்டன் ஓவர்களாக வீசுவதெல்லாம் அரிதினும் அரிதாக நடைபெறும் நிகழ்வாகும். அந்த வகையில் வரலாற்றில் அவ்வளவு சுலபமாக உடைக்க முடியாத அரிதான சாதனையை படைத்துள்ளதாக சாய் கிஷோருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பதே தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement