
சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது தங்களது முதலாவது லீக் போட்டியில் ஓமன் அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து நேற்று துபாய் மைதானத்தில் தங்களது இரண்டாவது லீக் போட்டியில் விளையாடியிருந்தது.
அப்படி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர்கள் இந்திய அணிக்கு கடும் சவாலை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்களை மட்டுமே அடித்த பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்திருந்தது. பாகிஸ்தான் நிர்ணயித்த 128 ரன்கள் என்கிற இலக்கினை இந்திய அணி 15.5 ஓவர்களில் சேசிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ஃபர்கான் ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு எதிராக முதல் பாகிஸ்தான் வீரராக ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்க பர்கான் :
44 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 40 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை பாகிஸ்தான் வீரர்கள் யாரும் பும்ராவிற்கு எதிராக டி20 போட்டிகளில் சிக்ஸரை அடித்ததே கிடையாது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடி 92 பந்துகளை வீசியிருந்த பும்ரா ஒரு சிக்சரை கூட கொடுக்காமல் மிகச் சிறப்பாக பந்துவீசி வந்திருந்தார்.
பும்ராவின் அந்த பயணம் நேற்று முடிவுக்கு வந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நான்காவது ஓவரை பும்ரா வீசும் போது ஃபர்கான் அவரது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசியிருந்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு எதிராக சிக்சர் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அணியின் லக்கி சார்ம்னா அது ஷிவம் துபே தான்.. வெளியான வியக்க வைக்கும் – புள்ளி விவரம்
அதுமட்டும் இன்றி பும்ராவிற்கு எதிராக ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து வீரர்கள் மட்டுமே ஒரு ஓவரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்திருக்கின்றனர். தற்போது அந்த சாதனை பட்டியலிலும் ஆறாவது வீரராக ஃபர்கான் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.