50வது பிறந்தநாள் பரிசாக சிட்னியை தொடர்ந்து ஷார்ஜாவில் சச்சினுக்கு வழங்கப்பட்ட பெரிய கெளரவம்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் துறையில் கிட்டத்தட்ட அனைத்து விதமான சாதனைகளையும் ஓய்வு பெற்ற 10 வருடங்கள் கழித்து இப்போதும் தன்வசம் வைத்துள்ள முன்னாள் இந்திய நட்சத்திர ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஏப்ரல் 24ஆம் தேதி நேற்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். தன்னுடைய 16 வயது பிஞ்சு கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களிலேயே இம்ரான் கான், வாசிம் அக்ரம் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்ட அவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நாளடைவில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்தார்.

மேலும் ஓரிரு வருடங்கள் நிலைத்து நின்று ஓரிரு சதங்கள் அடிக்க தடுமாறும் பல பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் 24 வருடங்கள் காயம் மற்றும் ஃபார்மை கடந்து இந்திய பேட்டிங் துறையை தனது தோள் மீது சுமந்து 30000+ ரன்களையும் 100 சதங்களையும் விளாசிய அவர் 2011 உலகக்கோப்பை உட்பட இந்தியாவின் நிறைய சரித்திர வெற்றிகளின் முக்கிய பங்காற்றினார். அதனால் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக கொண்டாடப்படும் அவருக்கு நேற்றைய 50வது பிறந்த நாளில் ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

- Advertisement -

ஷார்ஜாவில் கெளரவம்:
முன்னாதாக பெரும்பாலான வீரர்கள் சொந்த மண்ணில் சிறப்பாகவும் வெளிநாட்டு மண்ணில் தடுமாற்றமாகவும் செயல்படுவது வழக்கமாகும். ஆனால் சொந்த மண்ணுக்கு நிகராக வெளிநாட்டு மண்ணிலும் அபாரமாக செயல்பட்ட சச்சின் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் 2003இல் ஃபார்மின்றி தவித்த போது கவர் டிரைவ் அடிக்காமல் விளையாடிய 241* ரன்கள் இன்னிங்ஸ் உட்பட 5 டெஸ்ட் போட்டிகளில் 785 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டார்.

அதை அவருடைய 50வது பிறந்தநாளில் பாராட்டும் வகையில் வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கும் கதவுக்கு சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ப்ரைன் லாரா ஆகியோருடைய பெயரை சூட்டி அம்மைதானம் நிர்வாகம் கௌரவித்தது. அந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் புகழ்பெற்ற சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மேற்கு பகுதியில் உள்ள ஸ்டேண்ட்க்கு முழுவதுமாக “சச்சின் டெண்டுல்கர் ஸ்டேண்ட்” என்று பெயரிட்டு அம்மைதான நிர்வாகம் மாபெரும் கௌரவத்தை 50வது பிறந்தநாள் பரிசாக அறிவித்துள்ளது.

- Advertisement -

முன்னாதாக 90களில் சச்சின் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் நிலைமை இருந்ததையும் அவர் அவுட்டானால் இந்தியாவில் இருக்கும் தொலைக்காட்சிகள் ஆஃப் செய்யப்பட்டதை மறக்க முடியாது. இருப்பினும் பெரும்பாலான சமயங்களில் ரசிகர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர் விளையாடிய போட்டிகளில் ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டிகள் மறக்கவே முடியாதது. குறிப்பாக 1998ஆம் ஆண்டு சார்ஜாவில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய கோகோகோலா முத்தரப்பு தொடரை யாராலும் மறக்க முடியாது.

அத்தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கிய போட்டியில் அதிரடியாக செயல்பட்டால் தான் ரன் ரேட் அடிப்படையில் ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த சமயத்தில் உலகையே மிரட்டும் வகையில் ஷேன் வார்னே போன்ற தரமான பவுலர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியை சார்ஜாவில் சரமாரியாக அடித்து நொறுக்கிய சச்சின் 143 (131) ரன்கள் விளாசி வெற்றி பெற வைக்க முடியாவிட்டாலும் ரன் ரேட் அடிப்படையில் தனி ஒருவனாக இந்தியாவை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அதை விட ஏப்ரல் 24ஆம் தேதி இரவு மீண்டும் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய அவர் 134 (131) ரன்கள் விளாசி தம்முடைய 25வது பிறந்தநாள் பரிசாக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார். அந்த தொடரில் குறுக்கிட்ட மணல் புயலை போல விளையாடி மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்த சச்சினின் அந்த ஆட்டத்தை வல்லுனர்களும் ரசிகர்களும் “டேஸர்ட் ஸ்ட்ரோம்” என்று இப்போதும் கொண்டாடி வருகிறார்கள்.

அப்படி வரலாற்று சிறப்புமிக்க சதங்களை அடித்ததுடன் தங்களது மைதானத்தில் மொத்தமாக 7 சதங்களை விளாசி மகத்தான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள சச்சினுக்கு இந்த கௌரவத்தை அவரது பிறந்தநாள் பரிசாக கொடுப்பதாக ஷார்ஜா மைதானம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:DC vs SRH : ஒரு காபி ஆர்டர் பண்ணி குடிக்குறதுக்குள்ள இப்டியாடா பண்ணுவீங்க – அக்சர் படேல் கலகலப்பு

அதற்காக நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க முடியவில்லை என்றாலும் தமது மனதில் நீங்காத இடம் பிடித்த ஷார்ஜா மைதானத்தில் இவ்வளவு பெரிய கௌரவத்தை கொடுத்ததற்காக அம்மைதான நிர்வாகிகளுக்கு சச்சின் மனதார நன்றி தெரிவித்துள்ளார். அப்படி வெளிநாடுகளில் இந்திய ஜாம்பவானுக்கு கௌரவம் கொடுக்கப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியை வைத்துள்ளது.

Advertisement