WTC Final : நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்கல, அந்த முடிவு தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் – சச்சின் ஆதங்கம்

Sachin
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்துள்ள இந்தியா ரசிகர்களை தலை குனிய வைத்துள்ளது. கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இதே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை எம்எஸ் தோனி தலைமையில் வென்ற இந்தியா அதன் பின் 2021 டி20 உலக கோப்பை தவிர்த்து அனைத்து ஐசிசி தொடர்களிலும் லீக் சுற்றில் அசத்தலாக செயல்படும் நாக் அவுட் போட்டியில் ஏதோ ஒரு முக்கிய தருணத்தில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளது.

அந்த வகையில் இப்போட்டியில் ஆரம்ப முதல் கடைசி வரை இந்தியா மொத்தமாக சொதப்பியது என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த ஃபைனலில் முழுமையாக தயாராமல் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது போலவே இம்முறையும் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு ஒரு வாரம் முன்பாக இங்கிலாந்துக்கு பயணித்து நேரடியாக களமிறங்கியது தோல்விக்கு முக்கிய காரணமானது. அதை விட கடந்த ஃபைனலில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையில் அஸ்வின் – ஜடேஜா இருவரையும் தேர்வு செய்து தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

தோனியாக முடியாது:
இருப்பினும் இம்முறை போட்டி நடைபெற்ற ஓவல் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அந்த இருவரும் சேர்ந்தார்போல் விளையாட வேண்டுமென சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் உட்பட ஏராளமான முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்த வீரராக சாதனை படைத்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் இருக்கும் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் போன்ற 5 இடது கை பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார் என்பதால் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அவர்கள் யார் சொன்னதையும் கேட்காத ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் 4வது பவுலராக உமேஷ் யாதவை தேர்வு செய்தது தோல்விக்கு வெளிப்படையான காரணமாக அமைந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடாததற்கான பின்னணியை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என சச்சின் டெண்டுல்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஆஸ்திரேலியா அணியில் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் அஷ்வினை எடுக்காமல் விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் வென்றதற்காக ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள். முதல் நாளில் ஸ்டீவ் ஸ்மித் டிராவிஸ் ஹெட் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்த போதே வெற்றி அவர்களது பக்கம் சென்று விட்டது. அதற்கு ஈடு கொடுத்து போராட இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்”

“இருப்பினும் அவர்கள் அதை செய்யவில்லை. இப்போட்டியில் இந்தியாவுக்கும் சில நல்ல தருணங்கள் அமைந்தது. ஆனால் விளையாடும் 11 பேர் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்காததற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக இருக்கிறார். இப்போட்டி துவங்குவதற்கு முன்பாகவே நான் சொன்னது போல் நுணுக்கங்கள் தெரிந்த அவரைப் போன்ற ஸ்பின்னர்கள் எப்போதும் சுழலுக்கு சாதகமான மைதானங்களை மட்டும் நம்பி இருக்க மாட்டார்கள்”

இதையும் படிங்க:WTC Final : ஃபார்மட் சரில்ல மாத்துங்க என பழி போட்ட ரோஹித் சர்மா – ஒலிம்பிக் பற்றி தெரியுமா? என கமின்ஸ் மாஸ் பதிலடி

“மாறாக பவுன்ஸ் மற்றும் காற்றில் வேகத்தை மாற்றி தங்களிடம் இருக்கும் வேரியசன்களை பயன்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்த சமயத்தில் ஆஸ்திரேலியா அவர்களுடைய டாப் 8 பேட்ஸ்மேன்களில் 5 பேரை இடது கை பேட்ஸ்மேன்களாக கொண்டிருந்தார்கள் என்பதை மறக்க வேண்டாம்” என்று கூறினார். இது மட்டுமல்லாமல் இந்தியா தவறான 11 பேர் அணியை தேர்வு செய்து விட்டதாக ஸ்டீவ் வாக் போன்ற எதிரணியை சேர்ந்த முன்னாள் வீரர்களே ஆதங்கத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement