
இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியுள்ளது. ஆண்டர்சன் – டெண்டுல்கர் என்ற பெயரில் அழைக்கப்படும் அத்தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி எப்போதுமே தடுமாற்றமாக விளையாடுவது வழக்கமாகும்.
கடைசியாக ராகுல் டிராவிட் தலைமையில் 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அதன் பின் 18 வருடங்களாக தோல்வியைச் சந்தித்து வரும் இந்திய அணிக்கு இம்முறை ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வு காரணமாக விளையாடவில்லை. எனவே இம்முறை இளம் இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றி பெறுவது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.
அதனாலேயே 4 – 1 அல்லது 3 – 2 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்து எளிதாக வெல்வோம் என்று கிரேம் ஸ்வான் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கணித்துள்ளார்கள். இந்நிலையில் இளம் இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடிக்கும் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் கடைசியாக தொடரை வென்ற நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இது பற்றி சச்சின் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்தில் தொடரை வெல்வது மிகவும் அற்புதமான தருணம். அதற்காகவே நாங்கள் முயற்சி செய்கிறோம். 2007இல் எங்கள் அணியில் சில தனிநபர்களிடமிருந்து சிறப்பான செயல்பாடுகள் வந்தது. ஜஹீர் கான் மிகவும் முக்கிய பங்காற்றினார். அனைத்து வீரர்களும் முக்கிய நேரத்தில் அசத்தியது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்”
“ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றியை நாங்கள் கொண்டாடியது இன்னும் நினைவிருக்கிறது. இது போன்ற நினைவுகள் தான் உங்களுடன் எப்போதும் நிலைத்து நிற்கும். அந்த வெற்றியைப் பற்றி நாங்கள் 18 வருடங்களாக இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம். இம்முறை எங்களால் ஏதேனும் செய்ய முடியும் என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க: இந்தியாவிடம் தோத்தா.. பஸ்பால் என்ற பெயரில் இங்கிலாந்தை கெடுத்த அவர் ராஜினாமா செய்யனும்.. நாசர் ஹுசைன்
“அப்போது தான் 20 வருடங்கள் கழித்து தற்போது பெறப்போகும் வெற்றியைப் பற்றி நாங்கள் பேசுவோம். இம்முறை 3 – 1 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் என்று நான் செட்டிலாகிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல இம்முறை இளம் இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய சரித்திர வெற்றியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.