
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான விரேந்தர் சேவாக் கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2013-ஆம் ஆண்டு வரை 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 104 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த அதிரடி துவக்க வீரர்களில் நிச்சயம் விரேந்தர் சேவாக்கிற்கு இடம் உண்டு என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் தனது ஒருநாள் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வரும் தருவாயில் இருந்த போது தன்னை மனரீதியாக மீட்டெடுத்தது முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் என்று சேவாக் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தனது ஓய்வு முடிவை சச்சின் தடுத்து நிறுத்தியது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை விரேந்தர் சேவாக் வெளிப்படுத்தி உள்ளார். அவர் அளித்த இந்த பேட்டி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் கூறியதாவது : கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அங்கு நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் நான் விளையாடினேன்.
அதன் பிறகு எம்.எஸ் தோனி என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டார். பிளேயிங் லெவனில் எப்போது வாய்ப்பு கிடைக்கவில்லையோ அப்போதே இனி அணியில் நீடிக்க வாய்ப்பு இல்லை என்பதை முடிவு செய்து நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று முடிவுக்கு வந்தேன். பிறகு என்னுடைய அந்த முடிவை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்து கொண்டேன்.
அப்போது சச்சின் டெண்டுல்கர் என்னிடம் : கடந்த 1999-2000 ஆண்டுகளில் எனக்கும் இதே போன்ற மோசமான நிலை இருந்தது. அப்போது கிரிக்கெட்டை விட்டு போய்விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அந்த மோசமான காலகட்டம் கடந்து போனது. அதேபோன்று நீயும் உனது மாற்றத்திற்காக காத்திருக்க வேண்டும். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் ஒன்று, இரண்டு தொடர்களில் காத்திரு. அதன்பிறகு ஒரு தீர்க்கமான முடிவு எடு என்று அறிவுரை வழங்கினார்
இதையும் படிங்க : நம்ம நாட்டை விட இது முக்கியமா? ஆசிய கோப்பை போட்டியை புறக்கணிக்க வேண்டும் – ஹர்பஜன் சிங் வலியுறுத்தல்
அவரது அந்த அறிவுரைக்கு பின்னர் மீண்டும் நான் எனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்து தொடர்ந்து விளையாட துவங்கினேன் என விரேந்தர் சேவாக் கூறியிருந்தார். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.