
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மனு பாக்கர் 2 வெண்கல பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்தார். அத்துடன் சரபோத்ஜித் சிங், ஸ்வப்னில் குசலே ஆகியோரும் வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். அதே போல ஆடவர் ஹாக்கி அணியும் வெண்கல பதக்கம் வென்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
ஆனால் அந்தத் தொடரில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுக்க தயாரான வினேஷ் போகத் கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது கோடிக்கணக்கான மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆம் 50 கிலோ மகளிர் மல்யுத்தம் விளையாட்டு பிரிவில் அபாரமாக விளையாடிய அவர் செமி ஃபைனலில் நடப்பு சாம்பியனை வீழ்த்தினார். அதனால் ஃபைனலில் கண்டிப்பாக அவர் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சச்சின் கோரிக்கை:
இருப்பினும் ஃபைனல் நடைபெறுவதற்கு முந்தைய நாள் 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தது ரசிகர்களை மேலும் சோகமடைய வைத்தது. அந்த சூழ்நிலையில் அவரது தகுதி நீக்கத்திற்கு எதிராக இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டில் எல்பிடபுள்யூ விதிமுறையில் மறுபரிசீலனை செய்யும் போது ஸ்டம்ப்பில் பந்து உரசினாலும் முதல் நடுவர் நாட் அவுட் கொடுத்தால் “அம்பயர்ஸ் கால்” அடிப்படையில் பேட்ஸ்மேன் அவுட்டாக மாட்டார். அதே போல வேண்டுமென்றே தவறு செய்யாத வினேஷ் போகத்துக்கு நடுவர்கள் சூழ்நிலையை அறிந்து வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இது அம்பயர்ஸ் கால் நேரம். ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் உள்ளன. அந்த விதிகள் சில சமயங்களில் சூழல் பார்க்கப்பட்டு மறுபரிசலினை செய்யப்படலாம். வினேஷ் போகத் ஃபைனலுக்கு நியாயமான முறையில் தகுதி பெற்றார். அவரது தகுதி நீக்கம் ஃபைனலுக்கு முன்பாக இருந்தது. எனவே தகுதியான வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து பறிக்கப்படுவது விளையாட்டு உணர்வை மீறுகிறது”
இதையும் படிங்க: வெளியேறப்போகும் குமார் சங்கக்காரா.. உள்ளே வரப்போகும் ராகுல் டிராவிட் – ராஜஸ்தான் அணியில் ஏற்படவுள்ள மாற்றம்
“ஒருவேளை ஊக்க மருந்து பயன்பாடு போன்ற நெறிமுறை மீறல்களுக்காக ஒரு தடகள வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அது புரிந்து கொள்ளக்கூடியது. அதற்கு பதக்கம் வழங்கப்படாமல் இருப்பது நியாயமானதாகும். ஆனால் வினேஷ் தனது எதிரிகளை நியாயமான முறையில் தோற்கடித்து டாப் 2 இடங்களை பிடித்ததால் வெள்ளிக்கு தகுதியானவர். விளையாட்டு நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்காக நாம் காத்திருக்கும் வேளையில் வினேஷ்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம். பிரார்த்தனை செய்வோம்” என்று கூறியுள்ளார்.