வீடியோ : எங்க வாழ்க்கைல இப்படி ஒரு கேட்ச் பாத்ததே இல்ல, லோக்கல் வீரரை வியந்து பாராட்டிய சச்சின் – வாகன்

SACHIN Tendulkar Catch
- Advertisement -

கிரிக்கெட் என்பது உலக அளவில் அதிக ரசிகர்களை தன்னகத்தே கட்டிப்போட்டுள்ள 2வது மிகப்பெரிய விளையாட்டாக இருப்பதற்கு பல காரணங்களை சொல்லலாம். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கில்லியை அடிப்படையாகக் கொண்ட இந்த விளையாட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் துறையில் சிறந்து விளங்குவதற்கு நல்ல திறமையும் நுணுக்கங்களும் அவசியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பீல்டிங் துறையில் அற்புதமாக செயல்படுவதற்கு நல்ல உடல் தகுதியும் துடிதுடிப்பான மனமும் அவசியமாகிறது. அதை பயன்படுத்தி வரலாற்றில் பலமுறை பல வீரர்கள் அபாரமாக பீல்டிங் செய்து வெற்றியை தலைகீழாக மாற்றி உள்ளார்கள்.

மேலும் பீல்டிங் துறையில் பவுண்டரிகளை தடுத்து ரன்களை சேமிப்பது முதல் எதிரணி பேட்ஸ்மேன்களை ரன் அவுட்டாக்குவது வரை பல்வேறு முறைகள் இருந்தாலும் கேட்ச் பிடிப்பது மிகவும் கடினமானதாகவும் வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் கேட்செஸ் வின் மேட்ச்சஸ் என்று தனியாக பழமொழியே ஏற்படும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச்களை பிடிப்பது பீல்டர்களின் இன்றியமையாத கடமையாகும். அதை சரியாக பிடித்து விட்டால் அதுவே இறுதியில் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திடும்.

- Advertisement -

வியந்த சச்சின்:
ஒருவேளை அதை தவற விட்டால் 1999 உலகக்கோப்பையில் ஸ்டீவ் வாக் கேட்ச்சை தவற விட்ட ஹெர்சல் கிப்ஸ் தென் ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பையை கோட்டை விட்ட கதையை போன்ற நிலைமையை ஏற்படுத்தி விடும். அப்படி மாயாஜாலம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்த பீல்டிங் துறையில் சிறந்து விளங்குவதற்காக இப்போதெல்லாம் தனியாக நியமிக்கப்படும் பீல்டிங் பயிற்சியாளர்கள் பல தருணங்களில் தங்களது வீரர்களுக்கு கால்பந்து பயிற்சிகளை கொடுக்கிறார்கள்.

அது எந்தளவுக்கு கிரிக்கெட்டில் பயன்படுகிறது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தற்போது அரங்கேறியுள்ளது. அதாவது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் டென்னிஸ் பந்துகளை பயன்படுத்தி உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை நாம் அறிவோம். அந்த வகையில் ஸ்ரீ காசாக் எனும் உள்ளூர் தொடரில் பவுலர் வீசும் ஒரு பந்தை பேட்ஸ்மேன் அதிரடியாக சிக்சர் பறக்க விடுகிறார். அப்போது பவுண்டரி எல்லை அருகே நின்ற கிரன் தர்லேகர் எனும் பீல்டர் முடிந்தளவுக்கு காற்றில் பறந்து வழக்கம் போல அதை தாவி பிடிக்கிறார்.

- Advertisement -

ஆனால் தம்மால் பேலன்ஸ் செய்ய முடியாது என்பதை கணிக்கும் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் வழக்கம் போல பந்தை மேலே ஒற்றைக் கையால் தூக்கிப் போட்டு விட்டு பவுண்டரி எல்லைக்குள் செல்கிறார். அப்போது தூக்கி எறிந்த வேகத்திற்கு நேராக சற்று உயரமாக சென்ற பந்து கீழே வருவதை கவனித்த அவர் எப்படியாவது இதை சிக்ஸராக விடக்கூடாது எண்ணத்துடன் அந்த சமயத்தில் தன்னை நோக்கி கீழே வந்த பந்தை கால்பந்தில் தலைகீழாக சுழன்று காலால் அடிக்கும் “பை சைக்கிள் ஷாட்” போல் அடித்து மைதானத்திற்குள் அனுப்பி தன்னையும் பேலன்ஸ் செய்து கொண்டார்.

அவரது கடின உழைப்பு வீணாகாத வகையில் அருகில் இருந்த பீல்டரை நோக்கி அந்த பந்து சென்றது. அதை பிடிக்குமாறு கைகாட்டிக் கொண்டே மைதானத்திற்குள் அவர் சென்ற நிலையில் அதை சிந்தாமல் சிதறாமல் அருகிலிருந்த மற்றொரு பீல்டர் வெற்றிகரமாக கேட்ச் பிடித்தார். அதை பார்த்த ரசிகர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயாஜாலம் செய்த அந்த பீல்டரை வெறித்தனமாக கூச்சலிட்டு பாராட்டுகிறார்கள்.

இதையும் படிங்க:பாகிஸ்தானை துவம்சம் செய்து 2023 டி20 உ.கோ’யை வெற்றியுடன் துவக்கிய சிங்கப்பெண்கள் – ஆசிய அளவில் புதிய சாதனை

அத்துடன் ரிப்ளையில் அவரது கால்கள் பவுண்டரிகளை தொட்டதா என சோதிக்காமலேயே அது சிக்ஸர் கிடையாது நிச்சயம் அவுட் தான் என்பது பார்க்கும் அத்தனை பேருக்கும் தெளிவாக தெரிகிறது. அதை பார்த்து அசந்து போன இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கால்பந்து பிரியரை கிரிக்கெட்டுக்கு அழைத்துச் சென்றால் இதுதான் நடக்கும் என்று ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அதே போல் இது வரலாற்றின் மிகச்சிறந்த கேட்ச் என்று உறுதியாக சொல்ல முடியும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். மேலும் ஜிம்மி நீசம் உட்பட நிறைய வீரர்களும் ரசிகர்களும் அந்த வீரரை வியந்து பாராட்டி வருகிறார்கள்.

Advertisement