பாகிஸ்தானை துவம்சம் செய்து 2023 டி20 உ.கோ’யை வெற்றியுடன் துவக்கிய சிங்கப்பெண்கள் – ஆசிய அளவில் புதிய சாதனை

IND vs PAK Womens
- Advertisement -

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாக துவங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 16 முன்னணி அணிகள் களமிறங்கியுள்ளன. வரலாற்றில் இதுவரை மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாத இந்தியா சமீபத்தில் இதே தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் அண்டர் 19 டி20 உலக கோப்பையை ஷபாலி வர்மா தலைமையில் வென்று சரித்திரம் படைத்தது.

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அந்த வெற்றியை பார்த்து சீனியர் அணியினர் அதே தென்னாபிரிக்காவில் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் லட்சியத்துடன் இத்தொடரில் களமிறங்கியுள்ளனர்.
அந்த நிலைமையில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்தியா பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற தன்னுடைய முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

- Advertisement -

அதிரடி வெற்றி:
நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களில் போராடி 149/4 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு முனீபா அலி 12, ஜாவேரியா கான் 8, நிதா தார் 0, அமீன் 11 என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர். அதனால் 68/4 என தடுமாறிய அந்த அணியை கேப்டனாக முன்னின்று பொறுப்புடன் செயல்பட்ட கேப்டன் பீஷ்மா மரூப் கடைசி வரை அவுட்டாகாமல் 7 பவுண்டரியுடன் 68* (55) ரன்கள் குவித்து அசத்தினார்.

அவருடன் 4வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக செயல்பட்ட ஆயிஷா நஜீம் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 43* (15) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்தார், இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து 150 ரன்களை இலக்கை துரத்திய இந்தியாவுக்கு யஸ்டிக்கா பாட்டியா 17 (20) ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு நட்சத்திர தொடக்க வீராங்கனை சபாலி வர்மா அதிரடியாக 4 பவுண்டரியுடன் 33 (25) ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்து அவுட்டானார்.

- Advertisement -

அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரித் கௌர் 16 (12) ரன்களில் அவுட்டானாலும் 3வது இடத்தில் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிகர்ஸ் அடுத்து வந்த ரிச்சா கோஸ் உடன் இணைந்து நிதான ரன் குவிப்பில் ஈடுபட்டார். 14வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு ரன் ரேட்டை எகிற விடாமல் கட்டுக்குள் வைத்து 4வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதனால் 19 ஓவரிலேயே 151/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதில் ஜெமிமா ரோட்ரிக்கஸ் 8 பவுண்டரியுடன் 53* (38) ரன்கள் எடுக்க ரிச்சா கோஸ் 5 பவுண்டரியுடன் 31* (20) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றியால் 2023 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையை வெற்றியுடன் துவக்கியுள்ள இந்திய மகளிர் அணி குருப் பி பிரிவில் 2 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக இப்போட்டியில் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ஸ்மிருதி மந்தனா காயத்தால் பங்கேற்காத போதும் சிறப்பாக செயல்பட்டு இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜெமிமா ரோட்ரிகஸ் ஆட்டநாயகி விருதுகின்றார். மேலும் இப்போட்டியில் 150 ரன்களை வெற்றிகரமாக துரத்திய இந்தியா மகளிர் டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த ஆசிய அணி என்ற சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இங்கிலாந்து : 164, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2009
2. இந்தியா : 150, பாகிஸ்தானுக்கு எதிராக, 2023*
3. வெஸ்ட் இண்டீஸ் : 149, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2016

இதையும் படிங்க:IND vs AUS : படு தோல்வியால் ஜடேஜா போன்ற புதிய ஸ்பின்னரை களமிறக்கும் ஆஸ்திரேலியா – இந்தியாவை சாய்க்க புதிய திட்டம்

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்கு சென்ற இந்தியா ஆஸ்திரேலியாவிடம் சரமாரியாக அடி வாங்கி தோற்றது. ஆனால் இம்முறை அண்டர்-19 உலகக் கோப்பையை முதல் முறையாக வென்ற புத்துணர்ச்சியுடன் களமிறங்கியுள்ள இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை தோற்கடித்துள்ளதால் நிச்சயம் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

Advertisement