IND vs AUS : படு தோல்வியால் ஜடேஜா போன்ற புதிய ஸ்பின்னரை களமிறக்கும் ஆஸ்திரேலியா – இந்தியாவை சாய்க்க புதிய திட்டம்

Todd-Murphy
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்ட அந்த அணி கடைசி 2 தொடர்களில் தங்களை சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்கியது. அதற்காக பொதுவாகவே ஸ்லெட்ஜிங் செய்து வெற்றி பெறுவதில் கில்லாடியான ஆஸ்திரேலியா இம்முறை இந்தியா வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்சை உருவாக்கியுள்ளதாக ஒரு மாதத்திற்கு முன்பாகவே வார்த்தை போரை துவக்கியது.

ஆனால் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கும் 2வது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கும் சுருண்டு மோசமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா வாயில் பேசியதை செயலில் காட்டாமல் படுதோல்வியை சந்தித்தது. மறுபுறம் அதே பிட்ச்சில் 400 ரன்கள் குவித்து மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை வெறும் 3 நாட்களில் சுருட்டி இன்னிங்ஸ் மற்றும் 132 வித்தியாசத்தில் வென்று 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன் 400 ரன்கள் குவித்து நாக்பூர் பிட்ச் பற்றி ஆஸ்திரேலியா எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்தியா பொய்யாக்கியுள்ளது.

- Advertisement -

ஜடேஜா போல:
அதனால் விமர்சனத்தை சந்தித்துள்ள ஆஸ்திரேலியா டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் கண்டிப்பாக வென்று பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரவீந்திர ஜடேஜா போன்ற இடது கை ஸ்பின்னரை விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்யாதது ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக அஸ்டன் அகர் அல்லது மைக்கேல் ஸ்வெப்சன் விளையாடும் 11 பேர் அணியில் இடம் பிடித்திருக்க வேண்டும் என்று நிறைய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் தனது முதல் குழந்தை பிறப்பதால் ஆஸ்திரேலிய இடது கை ஸ்பின்னர் மைக்கேல் ஸ்வெப்சன் தாயகம் திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக அஸ்டன் அகர் இருந்தும் பேக்-அப் இடது கை ஸ்பின்னர் தேவை என்பதால் மாட் குனேமான் டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் அண்ட்ரூ மெக்டொனால்ட் அறிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக அஸ்டன் அகர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளதால் அவருடைய பந்து வீச்சு நுணுக்கங்களை இந்தியா உட்பட அனைவரும் தெரிந்து வைத்திருப்பார்கள்.

- Advertisement -

அதனால் முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கி 7 விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்த டோட் முர்பி போல இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத மாட் குனேமான் டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் நேரடியாக விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் அடுத்த போட்டியில் நேரடியாக விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக நாங்கள் 3 ஸ்பின்னர்களை வைத்து விளையாடினால் ஸ்வெப்சனுக்கு பதிலாக பேக்-அப் வீரர் தேவைப்படுகிறார். அதனால் தான் நாங்கள் எங்களது அணியில் 4 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று கூறினார்.

இதன் காரணமாக டெல்லியில் சுழலுக்கு சாதகமான மைதானம் இருக்கும் பட்சத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அறிந்திராத மாட் குனேமானை அறிமுகமாக களமிறக்கி வெற்றி பெறும் திட்டத்தை ஆஸ்திரேலியா வகுத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியுடன் இணையும் மாட் குனேமான் ஜடேஜாவை பார்த்து இந்திய சூழ்நிலைக்கு தேவைப்படும் யுக்திகளை கையாண்டு பந்து வீசப் போவதாக தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது.

இதையும் படிங்க: எனக்கு ஸ்கெட்ச் போட்டாங்க ஆனா – ஆஸியை சாய்க்க ஸ்பெஷல் திட்டம் பற்றி அஷ்வின் பேட்டி (திட்ட வீடியோ)

“நேற்று நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது எனக்கு ஆச்சரியப்படும் போன் கால் வந்தது. இந்த செய்தியை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மேலும் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியை நான் முழுவதுமாக பார்த்தேன். டோட் முர்பி மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஜடேஜா பந்து வீசுவதையும் நான் உன்னிப்பாக கவனித்தேன். இந்த தொடரில் நானும் இணைவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement