ஐபிஎல் 2022 : மிரட்டலாக செயல்பட்டு வரும் தமிழக வீரரை 360 டிகிரி பேட்ஸ்மேன் என பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

Sachin
- Advertisement -

மிகுந்த பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் டு பிளேஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்து 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் நல்ல நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக இந்த வருடம் எப்படியாவது தங்களது நீண்டநாள் கனவான முதல் ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டு விடலாம் என்ற நம்பிக்கை அந்த அணி ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. ஏனெனில் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2013 முதல் நீண்ட காலமாக பெங்களூரு அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

ஒரு ரன் மெஷினான அவர் பேட்டிங்கில் தம்மால் முடிந்த அளவுக்கு மலைபோல ரன்களை குவித்து தனது ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக பெங்களூருவுக்கு முதல் கோப்பையை வென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் முழு மூச்சுடன் போராடியபோதும் ஏதேனும் ஒரு சில தருணங்களில் சொதப்பிய அந்த அணி கடைசி வரை கோப்பையை வாங்க முடியவில்லை. அதனால் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த அவர் பணிச்சுமை காரணமாக கடந்த வருடம் இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது பெங்களூர் அணியின் கேப்டன் பதவியிலும் விலகினார்.

- Advertisement -

கலக்கும் டிகே:
அந்த வகையில் கடந்த 2012-க்கு பின் மீண்டும் ஒரு சாதாரண வீரராக விளையாடத் துவங்கியுள்ள அவர் கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாத காரணத்தால் டு பிளேஸிஸ் தலைமையில் சுதந்திர பறவையாக அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து பெங்களூரு முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்ற வேண்டும் என அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த வருடம் பெங்களூரு அணியின் பவுலிங் துறையை ஹர்ஷல் படேல், சிராஜ், ஹஸரங்கா போன்ற வீரர்கள் கவனித்துக்கொள்ள பேட்டிங் துறையில் கேப்டன் டு பிளேஸிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அஹமத் ஆகியோர் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்து வருகிறார்கள்.

அதிலும் வெற்றியை உறுதி செய்யும் முக்கியமான பினிஷிங் பொறுப்பை தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளிலும் கண்ணும் கருத்துமாக செய்தார் என்றே கூறலாம். ஏனெனில் இதுவரை பெங்களூர் பங்கேற்ற 5 போட்டிகளிலும் 32* (14), 14* (7), 44* (23), 7* (2), 34 (14) என அற்புதமான பினிஷிங் செய்து வரும் அவர் எம்எஸ் தோனி, ஹர்டிக் பாண்டியா போன்ற இதர அணி பினிஷர்களை விட இந்த வருட ஐபிஎல் தொடரின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:
இந்நிலையில் கடைசி நேரத்தில் களமிறங்கி எதிரணிகளை பந்தாடும் தினேஷ் கார்த்திக்கை இந்தியாவின் ஜாம்பவான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.”பெங்களூரு அணியிடம் மிகவும் அபாயகரமான லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் உள்ளார். வேகப்பந்து அல்லது சுழல்பந்து என எதுவாக இருந்தாலும் மைதானத்தின் 360 டிகிரியிலும் சுழன்று அடிக்கும் திறமை அவரிடம் உள்ளது.

அதிலும் முதல் பந்திலிருந்தே அவர் தனது அதிரடியை தொடங்குகிறார். இதற்கு முன் மிட் விகெட் அல்லது கவர் திசையில் மட்டும் அடிப்பேன் என்ற அவரின் நிலைப்பாடு இப்போது இல்லை. அவர் பந்தை பார்த்து அபாரமாக அடிக்கிறார். அதிலும் பந்து வரும் லைன் மற்றும் லென்த்துக்கு ஏற்றார் போல் அவரின் பேட்டின் வேகம் உள்ளது. எனவே தினேஷ் கார்த்திக்கை விட ஒரு சில வீரர்கள் மட்டுமே உலகில் லைன் மற்றும் லென்த்தை சீக்கிரமாக கணிக்க கூடியவர்களாக உள்ளனர்” என பாராட்டினார்.

- Advertisement -

முந்தைய காலகட்டங்களில் மிடில் அல்லது கவர்ஸ் திசையில் மட்டும் அடிக்க கூடியவராக இருந்த தினேஷ் கார்த்திக் தற்போது தனது ஆட்டத்தில் முன்னேற்றத்தை செய்து மைதானத்தின் நாலா புறமும் 360 டிகிரியிலும் பந்தை தெறிக்க விடுகிறார் என சச்சின் பாராட்டியுள்ளார். அதிலும் பந்து எந்த லைன், லென்த்தில் என்பதை சீக்கிரமாகவே கணிக்கும் அவரின் அபார திறமை உலகில் ஒரு சில வீரர்களிடம் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கரே பாராட்டியதால் மிகவும் மகிழ்ந்த தினேஷ் கார்த்திக் “இது போன்ற மகத்தான ஜாம்பவான் பாராட்டுவது உங்களை வானத்து மேகத்தில் பறப்பதை போன்ற உணர்வைத் தருகிறது” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் மட்டுமல்ல, மொத்தமா விளையாடுன 11 பேருக்கும் அபராதம் விதிப்பு- ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி

கடந்த சில வருடங்களில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் தற்போது சாதாரண வீரராக விளையாடுவது அவருக்கு மேலும் சுதந்திரத்தை கொடுத்துள்ள காரணத்தால் முன்பைவிட அவரின் ஆட்டத்தில் அனல் தெறிக்கிறது. இதன் காரணமாக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடுவதே லட்சியம் என தெரிவித்துள்ள அவருக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டியது மேலும் ஊக்கத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

Advertisement