IND vs AUS : புதிய வரலாற்று சாதனை படைத்த அஷ்வினை தமிழில் வாழ்த்திய சச்சின் – என்ன சொன்னாருன்னு பாருங்க

Ashwin Sachin Tendulkar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – காவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது. அந்த நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் முதலில் பெரிய ரன்களை குவித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் ஆரம்பத்திலேயே ஷமி, சிராஜ் ஆகியோரது வேகத்தில் வார்னர், கவாஜா ஆகிய தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை தலா 1 ரன்னில் இழந்த அந்த அணி 2/2 என்ற மோசமான தொடர்கதை பெற்றது. இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவுக்கு காப்பாற்றிய மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களிலும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களிலும் ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்கள். அந்த சமயத்தில் மிடில் ஆர்டரில் 7 பவுண்டரியுடன் அதிரடி காட்ட முயன்ற அலெக்ஸ் கேரி 36 (33) ரன்களில் அஷ்வின் சுழலில் அவுட்டானார்.

- Advertisement -

வாழ்த்திய சச்சின்:
அந்த வகையில் சிறப்பாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் 20 (71) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட ரோகித் சர்மா விரைவாக அரை சதம் கடந்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவருடன் முதல் நாள் கடைசி நேரத்தில் களமிறங்கிய அஸ்வின் 2வது நாளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (62) ரன்கள் அடித்து தனது வேலையை கச்சிதமாக செய்து அவுட்டானார்.

முன்னதாக இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை சாய்த்த ரவிச்சந்திரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் 450 விக்கெட்டுகளை கடந்த 2வது இந்திய வீரராக சாதனை படைத்தார். அதை விட வெறும் 89 போட்டிகளிலேயே 450 விக்கெட்டுகள் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 450 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற கும்ப்ளேவின் (93) சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். மேலும் உலக அளவில் முத்தையா முரளிதரனுக்கு (80 போட்டிகள்) பின் அதிவேகமாக 450 விக்கெட்டுகள் எடுத்த 2வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.

- Advertisement -

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 150, 200, 250, 300, 350, 400, 450 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற மொத்த வரலாற்றுச் சாதனையும் படைத்துள்ள அவர் ரசிகர்களை ஆச்சர்யபடுத்தியுள்ளார். அது போக ஏற்கனவே 3066 ரன்களையும் எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000+ ரன்கள் 450+ விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆசிய வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார். இப்படி ஏராளமான சாதனைகளை படைத்த அஷ்வினை இந்திய கிரிக்கெட்டின் சாதனை நாயகனாக கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் மனதார வாழ்த்தியுள்ளார்.

குறிப்பாக “அற்புதமான மைல்கல்” என தூய தமிழில் 450 விக்கெட்டுகளை எடுத்ததற்காக அஸ்வினை தனது ட்விட்டரில் சச்சின் மனதார பாராட்டியுள்ளது தமிழக ரசிகர்களை பெருமையடைய வைத்துள்ளது. அதே போல் இப்போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா, 5 விக்கெட்டுகள் எடுத்த ரவீந்திர ஜடேஜா, 450 விக்கெட்டுகளை எடுத்த அஷ்வின் ஆகியோரை ஆர்ஆர்ஆர் என்றும் குறிப்பிட்டு சச்சின் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ : சுழலில் திணறும் பேட்ஸ்மேன்கள், அசால்ட்டாக சதமடித்த ஹிட்மேன் – தோனி, கோலி படைக்காத புதிய வரலாற்று சாதனை

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே அதிக ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் வென்ற இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை கடந்த டிசம்பரில் நடைபெற்ற வங்கதேச டெஸ்ட் தொடரில் அஷ்வின் சமன் செய்தார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினுக்கு நிகராக இந்தியாவின் மேட்ச் வின்னராக தொடர்ந்து சாதனை படைத்து வரும் அஷ்வின் நிறைய மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டில் தன்னை ஜாம்பவானாக நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement