வீடியோ : சுழலில் திணறும் பேட்ஸ்மேன்கள், அசால்ட்டாக சதமடித்த ஹிட்மேன் – தோனி, கோலி படைக்காத புதிய வரலாற்று சாதனை

Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – காவாஸ்கர் கோப்பை தொடரில் குறைந்தது 3 போட்டிகளை வென்று வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் லட்சியத்துடன் இந்தியா களமிறங்கியுள்ளது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா கடைசி 2 தொடர்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. அதனாலேயே நாக்பூர் பிட்ச் வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அணியைச் சேர்ந்தவர்கள் இந்தியாவை விமர்சித்தனர்.

அந்த நிலைமையில் பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கிய முதல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளில் இழந்து 177 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக வார்னர், கவாஜா ஆகிய தொடக்க வீரர்கள் ஷமி, சிராஜ் வேதத்தில் தலா 1 ரன்னில் அவுட்டானதால் 2/2 என தடுமாறிய அந்த அணியை 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களிலும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களிலும் ரவீந்திர ஜடேஜா சுழலில் சிக்கினார்கள்.

- Advertisement -

அசத்திய ஹிட்மேன்:
அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும் அஷ்வின் 3 விக்கெட்களும் சாய்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுழலுக்கு சாதகமான மைதானத்தில் பொறுமையாக விளையாடினால் வேலைக்காகாது என்பதை உணர்ந்த கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரை சதமடித்து நல்ல தொடக்கம் கொடுத்தார். ஆனால் அவருடன் பெயருக்காக 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் மீண்டும் 20 (71) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அந்த நிலைமையில் முடிவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் களமிறங்கிய அஷ்வின் இன்று துவங்கிய 2வது நாள் ஆட்டத்தில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (62) ரன்கள் எடுத்து தனது வேலையை செய்து அவுட்டானார். அடுத்து வந்த புஜாரா 7 (14) ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் ஆரம்பத்தில் சற்று அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா நேரம் செல்ல செல்ல நிதானத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் எதிர்ப்புறம் வந்த விராட் கோலி 12 ரன்களிலும் உச்சகட்ட ஃபார்மேல் இருக்கும் சூரியகுமார் யாதவ் தனது அறிமுக போட்டியிலேயே 8 ரன்களிலும் ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய ரோகித் சர்மா 14 பவுண்டரி 2 சிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 9வது சதத்தை விளாசி இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். குறிப்பாக கேப்டனாக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துள்ள அவர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக சதமடித்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் படைக்காத வரலாற்றுச் சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இதற்கு முன் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த போதிலும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக சதமடித்ததில்லை. மேலும் திலகரத்னே தில்சான், பப் டு பிளேஸிஸ், பாபர் அசாம் ஆகியோருக்கு பின் உலக அளவில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த 4வது கேப்டன் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ : சுழலில் திணறும் பேட்ஸ்மேன்கள், அசால்ட்டாக சதமடித்த ஹிட்மேன் – தோனி, கோலியை படைக்காத புதிய வரலாற்று சாதனை

அதை விட சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட நிறைய உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் திண்டாடும் நிலையில் ரோகித் சர்மா மட்டும் தனது அற்புதமான ஆட்டத்தால் சதமடித்து தன்னையும் கிளாஸ் வீரர் என்பதை நிரூபித்துள்ளார். அவரது அதிரடியால் ஆஸ்திரேலியா எடுத்த 177 ரன்களை கடந்துள்ள இந்தியா இந்த போட்டியில் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

Advertisement