ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை கூடியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா 74 ரன்கள் முன்னிலை பெற்றதால் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை மனம் தளராமல் அபாரமாக பௌலிங் செய்த தென்னாப்பிரிக்கா 207 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 58*, அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 4, லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இறுதியில் 282 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணிக்கு ரிக்கல்டன், முல்தர் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சாம்பியன்:
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் மிகவும் பொறுப்புடன் விளையாடி 136 ரன்கள் விளாசி அசத்தினார். அதன் வாயிலாக ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் சதத்தை அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் பவுமா 66 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவர்களுடைய உதவியால் 1998க்குப்பின் 27 வருடங்கள் கழித்து தென்னாபிரிக்கா முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்தது. அத்துடன் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை கொடுத்த போது தென்னாப்பிரிக்கா புயலில் சிக்கியதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
வாழ்த்திய சச்சின்:
அப்போது பதற்றமடையாமல் அமைதியைப் பின்பற்றிய தென்னாபிரிக்கா மார்க்ரம் மற்றும் பவுமா ஆகியோரது உதவியுடன் வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து தன்னுடைய மாயாஜாலத்தை நெசவு செய்து வருகிறது”
இதையும் படிங்க: டக் அவுட்டான அப்றமும் சதமடிச்சு ஆஸியை தோற்கடிக்க இதான் காரணம்.. தெ.ஆ ஆட்டநாயகன் மார்க்ரம் பேட்டி
“இறுதிப் போட்டியில் ஒவ்வொரு செசனும் சொந்தக் கதையைக் கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்கா புயலில் அமைதியைக் கண்டறிந்தது. 4வது இன்னிங்சில் மார்க்ரமின் அமைதி, அழுத்தத்தின் கீழ் பவுமாவின் திடம் ஆகியவை உயர்ந்து நின்றது. அவரின் சதம் நினைவு கொள்ளப்படும். அவர்களுடைய பார்ட்னர்ஷிப் வரலாற்றின் நம்பிக்கையாக மாறியது. உலக டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்த தென்னாப்பிரிக்காவுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.



