இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மோதும் அதன் பிறகு மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் அவர் பங்கேற்க மாட்டார். தனது முதல் குழந்தை பிறப்புக்காக அவர் இந்தியா திரும்புகிறார்.
அதனால் அடுத்த மூன்று போட்டிகளில் ரோகித் சர்மா அல்லது ரஹானே கேப்டனாக இருப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று தனது உடல் தகுதியை நிரூபித்து ரோகித் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் அடுத்த கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட மட்டுமே வாய்ப்பு என்பதால் அவர் இறுதி இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட அணியில் தெரிவு செய்யப்படுவார். இதனால் 2-வது போட்டியில் இருந்து ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே விராட் கோலி விளையாட இருக்கிறார். அதன்பிறகு மூன்று போட்டிகளிலும் அவர் இல்லாதது இல்லாதது பெரிய வெற்றிடத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் இது போன்ற சூழ்நிலையை அணி பழகிக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் முன்பு அணில் கும்ப்ளே கேப்டனாக இருந்தபோது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக அவர் விலக நேரிட்டது. அப்போது இந்திய அணியின் முதன்மை பந்து வீச்சாளராக அவர் இருந்தார் ஆனாலும் அந்த நிலைமையை சமாளித்து இந்திய அணி விளையாடியது. அதேபோல கோலி இல்லாத இடத்தை இளம் வீரர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வாய்ப்பு என்று கருதி விளையாட வேண்டும்.
மேலும் நடராஜனை டெஸ்ட் தொடரில் சேர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் : நடராஜனை பொறுத்தவரை அவர் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக விளையாடி உள்ளார். ஒரு வீரரை களமிறக்குவதோ அல்லது மாற்று வீரராக தேர்ந்தெடுப்பதோ அது தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகத்தின் பணி. அவர்கள்தான் சரியான முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். எனவே இத்தகைய முடிவுகளை எடுப்பதில் அவர்களது கடமை அதிகம். இது போன்ற தனிப்பட்ட முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது.