IND vs SA : சாம்சனின் மொத்த போராட்டத்தையும் வீணாக்கிய அந்த ஒரு முடிவு, இந்தியாவின் தோல்விக்கான காரணம் என்ன

Sanju Samson Tabriz Shamsi
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்ட நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. லக்னோவில் அக்டோபர் 6ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரின் முதல் போட்டி மழையால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு 49 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜானெமன் மாலன் 22 (42) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் பவுமா 8 (12) ரன்களில் அவுட்டானார்.

அப்போது களமிறங்கிய மார்க்ரம் டக் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் போராடிய மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 48 (54) ரன்களில் அவுட்டானார். அதனால் 110/4 என தடுமாறிய தங்களது அணிக்கு 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹென்றிச் க்ளாஸென் – டேவிட் மில்லர் ஆகியோர் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆரம்பத்தில் பொறுமையைக் கையாண்ட இவர்கள் கடைசி 10 ஓவர்களில் அதிரடியான பேட்டிங் வெளிப்படுத்தி கடைசி வரை அவுட்டாகாமல் 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 249/5 ரன்கள் குவிக்க உதவினர்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
அதில் க்ளாஸென் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 74* (65) ரன்கள் எடுக்க டேவிட் மில்லர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 75* (63) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 250 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் 3 (7) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே கேப்டன் ஷிகர் தவானும் 4 (16) ரன்களில் நடையை கட்டினார். அப்போது விக்கெட்டை விடக்கூடாது என்பதற்காக ஆமை வேகத்தில் ஆடிய ருதுராஜ் கைக்வாட் 19 (42) ரன்களிலும் அவருக்கு பின்னாடியே இஷான் கிசன் 20 (37) ரன்களிலும் நடையைக்கட்டினார்.

அதனால் 17.4 ஓவரில் 51/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கி சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் தமக்கு மிகவும் பிடித்த சுழல் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். 5வது விக்கெட்டுக்கு முக்கியமான 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய இந்த ஜோடியில் ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரியுடன் 50 (37) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய ஷார்துல் தாகூர் சாம்சனுடன் இணைந்து பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 6வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி நேரத்தில் 5 பவுண்டரியுடன் 33 (31) ரன்களில் வெற்றிக்கு போராடி அவுட்டானார்.

- Advertisement -

ஆனாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற சஞ்சு சாம்சன் கடைசி நேரத்தில் அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. தப்ரிஸ் சம்சி வீசிய அந்த ஓவரில் 6, 4, 4, 0, 1 என முடிந்தளவுக்கு போராடிய அவர் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (63) ரன்கள் எடுத்த போதிலும் 40 ஓவர்களில் 240/8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி ங்கிடி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இப்போட்டியில் ஆரம்பத்திலேயே மழை பெய்ததால் நேரம் செல்லசெல்ல பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது. அதை சரியாக கணிக்காமல் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசி 23 ஓவர்கள் வரை சிறப்பாக செயல்பட்டாலும் கடைசி கட்ட ஓவர்களில் மீண்டும் மில்லர் – க்ளாஸென் ஆகியோரிடம் ரன்களை வாரி வழங்கியது பாதி வெற்றியை தகர்த்தது. மீதி வெற்றி பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் பவர்ப்ளே ஓவர்களைப் பயன்படுத்தி ஆரம்பத்திலேயே அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டிய தவான், கில், கைக்வாட், இஷான் கிசான் ஆகியோர் அதிக பந்துகளை தின்று மெதுவாக விளையாடி 51/4 என்ற மோசமான தொடக்கத்தை கொடுத்த போது பறிபோனது.

ஏனெனில் அந்த மோசமான தொடக்கத்திலிருந்து என்னதான் ஷ்ரேயஸ், சாம்சன், தாகூர் ஆகியோர் போராடினாலும் இந்தியாவை மீட்டெடுக்க முடியவில்லை. அதைவிட 4 தொடக்க வீரர்கள் முதல் 4 பேட்ஸ்மேன்களாக விளையாட தேர்வு செய்யப்பட்ட தவறான முடிவு இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. அதுபோக அக்சர் படேல் இல்லாத நிலையில் தாகூருக்குப் பின் பேட்டிங் செய்ய சபாஷ் அஹமத் போன்ற லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாதது தோல்விக்கு காரணமானது. மறுபுறம் இந்தியாவின் தவறுகளை பயன்படுத்தி பேட்டிங்கில் கடைசி நேரத்திலும் பந்துவீச்சில் ஆரம்பத்திலேயும் அசத்திய தென்ஆப்பிரிக்கா டி20 தொடரின் தோல்விக்கு பதிலடியாக வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement