INDvsRSA : பரபரப்பான போட்டியில் இறுதியில் ஏமாற்றத்தை அளித்த இந்திய அணி – தெ.ஆ ஜெயித்தது எப்படி?

IND vs RSA MIller Rahul Rohit Suryakumar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் தெறிக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற 30வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து கத்துக்குட்டியான நெதர்லாந்தை அசால்டாக வீழ்த்திய இந்தியா இப்போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகி விடும் என்ற நிலைமையில் களமிறங்கியது. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 15 (14) கேஎல் ராகுல் 9 (12) என ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஏமாற்றினர்.

அப்போது காப்பாற்றுவார் என கருதப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 12 (11) ரன்கள் அவுட்டான நிலையில் முதல் முறையாக வாய்ப்பு பெற்ற தீபக் ஹூடா டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். போதாக்குறைக்கு ஹர்திக் பாண்டியாவும் 2 (3) ரன்களில் அவுட்டானதால் 49/5 என மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடிய இந்தியா 100 ரன்கள் தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் நான் இருக்கிறேன் என்ற வகையில் மறுபுறம் நங்கூரத்தை போட்ட சூரியகுமார் யாதவ் அடுத்த களமிறங்கிய தினேஷ் கார்த்திக்குடன் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

போராடிய இந்தியா:
15 ஓவர்கள் வரை விக்கெட்டை விடாமல் 6வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றிய இந்த ஜோடியில் கடைசி வரை அதிரடியை துவக்காத தினேஷ் கார்த்திக் மெதுவாக விளையாடி 6 (15) ரன்களில் நடையை கட்டினார். அப்போது களமிறங்கிய அஸ்வின் போராடி 7 (11) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் மும்பை வான்கடே மைதானத்தில் பேட்டிங் செய்வது போல் தென்னாப்பிரிக்காவை அசால்டாக அடித்து துவம்சம் செய்த சூரியகுமார் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 68 (40) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் போராடி ஆட்டமிழந்தார். அவரது அற்புதமான ஆட்டத்தால் 100 ரன்களைக் கடந்த இந்தியா 20 ஓவர்களில் 133/9 என்ற ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது.

அந்தளவுக்கு அற்புதமாக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளையும் வேன் பர்ணல் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 134 என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு 2வது ஓவரை வீசிய அரஷ்தீப் சிங் அதிரடி வீரர் குயின் டீ காக்கை 1 (3) ரன்னில் அவுட்டாக்கி அடுத்து வந்த ரிலீ ரூல்ஸவை டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் 3/2 என தடுமாறிய தென்னாப்பிரிக்காவை காப்பாற்ற முயன்ற கேப்டன் பவுமா ஷமியின் பந்தில் 10 (15) ரன்களில் அவுட்டானார். அதன் காரணமாக 24/3 என மீண்டும் அந்த அணி தடுமாறியதால் இந்தியா வெல்லும் என ரசிகர்கள் நம்பினர்.

- Advertisement -

ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்கம் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் நங்கூரத்தை போட்டு விக்கெட் விடாமல் ரன்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் வழக்கமாக அதிரடியாக விளையாடக்கூடிய மில்லர் இன்று நிதானத்தை காட்டிய நிலையில் மறுபுறம் ஐடன் மார்க்ரம் சற்று அதிரடியாக செயல்பட்டு அரை சதம் கடந்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். 6வது ஓவரில் சேர்ந்த இவர்கள் 16வது ஓவர் வரை 76 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்ததால் வெற்றியை நெருங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு கடைசி 5 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது வந்த பாண்டியா 6 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (41) ரன்கள் எடுத்த மார்க்ரமை அவுட்டாக்கி இந்தியாவுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தினார். ஆனால் அவர் அவுட்டான பின் எதிர்ப்புறமிருந்த டேவிட் மில்லர் அதிரடியை அதிகப்படுத்திய நிலையில் கடைசி நேரத்தில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் அஷ்வினிடம் 6 (6) ரன்களில் அவுட்டானார். அதனால் கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது மறுபுறம் சிம்ம சொப்பனமாக நின்ற டேவிட் மில்லர் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (46) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார்.

அதனால் 19.4 ஓவரில் 137/5 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அரஷ்தீப் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய இந்திய பேட்டிங் 150 ரன்கள் கூட எடுக்காததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஏனெனில் 134 ரன்களை பவுலர்கள் முடிந்த வரை கடைசி ஓவர் வரை கட்டுப்படுத்த போராடினார்கள். இந்த வெற்றியால் 3 போட்டியில் 2 வெற்றிகளை பதிவு செய்த தென்னாபிரிக்கா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மறுபுறம் போராடித் தோற்ற இந்தியா 2வது இடத்தில் நீடித்தாலும் எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

Advertisement