IND vs SA : முடிவுக்கு வந்த 3வது டி20 போட்டி : ரோஹித் எடுத்த தவறான முடிவால் – தோல்வியை சந்தித்த இந்தியா

- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் வரலாற்றில் முதல் முறையாக தொடரை வென்று சாதனை படைத்தது. அந்த நிலைமையில் இத்தொடரின் கடைசி சம்பிரதாய போட்டி அக்டோபர் 4ஆம் தேதியன்று இந்தூரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 3 (8) ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக களமிறங்கிய ரிலீ ரோசவ் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் உடன் சேர்ந்து மிரட்டலாக பேட்டிங் செய்தார்.

ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களை சரமாரியாக அடித்து 2வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் தென்னாப்பிரிக்காவை வலுப்படுத்தியபோது எதிர்புறம் விளையாடிய டி காக் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68 (43) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் ஓயாத அவர் அடுத்து களமிறங்கிய திரிஷன் ஸ்டப்ஸ் உடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தென் ஆப்பிரிக்காவை மேலும் வலுப்படுத்தினார். அவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த ஸ்டப்ஸ் 23 (18) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
ஆனாலும் மறுபுறம் சிம்ம சொப்பனமாக மாறிய ரோசவ் 7 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்து 100* (48) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் மிரட்டிய மில்லர் தனது பங்கிற்கு 3 சிக்சருடன் 19* (5) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 227/3 ரன்களை எடுக்க இந்தியா சார்பில் தீபக் சஹர் மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதை தொடர்ந்து 228 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் 1 (4) ரன்னில் நடையை கட்டினார்.

அதனால் 4/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு ஆச்சர்யப்படும் வகையில் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கி 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடி காட்ட முயன்ற ரிஷப் பண்ட் பிறந்த நாளில் 27 (14) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே மற்றொரு ஆச்சரியமாக 4வது இடத்தில் களமிறங்கி அட்டகாசமாக பேட்டிங் செய்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46 (21) ரன்களை குவித்து தனக்கு வைக்கப்பட்ட சோதனையில் வெற்றி கண்டு ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடுத்த ஓவரிலேயே நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 8 (6) ரன்களில் ஆட்டமிழக்க அதன்பின் அக்சர் படேல் 9 (8) அஷ்வின் 2 (4) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இந்தியாவின் கதை முடிந்தது. ஏனெனில் இறுதியில் தீபக் சஹர் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31 (17) ரன்களும் உமேஷ் யாதவ் 20* (17) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் 18.3 ஓவரில் 178 ரன்களுக்கு சுருண்ட இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அசத்தலாக பந்து வீசி ஆறுதல் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக பிரிடோரியஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

முன்னதாக சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று ஆஸ்திரேலிய தொடரில் மீண்டெழுந்த இந்தியா இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வென்றதால் இந்த சம்பிரதாய போட்டியில் ஏராளமான மாற்றங்களை நிகழ்த்தியது. குறிப்பாக ராகுல், விராட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ரிஷப் பண்ட் தொடக்க வீரராகவும், ஷ்ரேயஸ் ஐயர் 3வது இடத்திலும் களமிறக்கிய ரோகித் சர்மாவின் முடிவு எந்த பயனையும் கொடுக்கவில்லை. மேலும் தமக்குத்தாமே டக் அவுட்டான அவர் தற்சமயத்தில் சூப்பரான பார்மில் இருக்கும் சூர்யகுமாரை 5வது இடத்தில் களமுறக்கிய சோதனையும் தவறென்று நிரூபித்தது.

அதைவிட பேட்டிங்க்கு சாதகமான இந்தூர் மைதானத்தில் 200 ரன்களை அடிக்க வேண்டும் என தெரிந்தும் வெறும் 5 முழுநேர பேட்ஸ்மேன்களை மட்டும் விளையாடிய அவரது முடிவும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஏனெனில் கடைசியில் தீபக் சாஹர் அடித்ததற்கு இன்னுமொரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் இருந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கலாம். அவை அனைத்தையும்விட தற்சமயத்தில் இந்திய பேட்டிங் அற்புதமாக இருக்கும் போது பவுலிங் தான் குறிப்பாக டெத் ஓவர்கள் தான் பிரச்சினையாக உள்ளது.

எனவே அதை சரி செய்வதை விட்டுவிட்டு பேட்டிங் துறையில் கைவைத்த ரோகித் சர்மாவின் முடிவே இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றாலும் ஆசிய கோப்பையில் தோல்வியை பரிசளித்த எந்த தவறுகளையும் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் திருத்தி கொள்ளாமலேயே உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட உள்ளனர்.

Advertisement