ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது ராஜஸ்தான் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் தங்களது ஏழாவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
என்னுடைய குடும்பம் முன்னாடி இது நடந்ததில் மகிழ்ச்சி : ரயான் ரிக்கல்டன்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது. அதன் காரணமாக 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. மிகப்பெரிய இலக்கினை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக துவக்க ஆட்டக்காரராக விளையாடிய ரயான் ரிக்கல்டன் 38 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 61 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பங்களிப்பு குறித்து பேசிய ஆட்டநாயகன் ரயான் ரிக்கல்டன் கூறுகையில் : என்னுடைய குடும்பம் தற்போது இங்கு இருக்கின்றனர். அவர்கள் விடுமுறைக்காக தற்போது இந்தியா வந்திருக்கும் வேளையில் அவர்களுக்கு முன்னதாக என்னுடைய சிறப்பான ஆட்டம் வெளிவந்ததில் மிகவும் மகிழ்ச்சி. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இது போன்ற பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சரியான நேரத்தில் எங்களது அணி நல்ல பார்மிற்கு வந்துள்ளது மிகவும் சிறப்பான ஒன்று. ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவது மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் எங்கள் இருவருக்கும் சரியான துவக்கம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அனைத்தும் சரியாகி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். ரோகித் சர்மாவுடன் விளையாடும்போது உண்மையிலேயே நல்ல உணர்வு இருக்கிறது.
இதையும் படிங்க : மீண்டும் ரோஹித், மும்பைக்கு சாதகமாக வேலையை துவங்கிய அம்பயர்கள்? ஆதாரத்துடன் ரசிகர்கள் விமர்சனம்
இந்த போட்டியில் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆடிய ஆட்டம் தான் இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிற்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை புரிந்து கொண்டு எனது பேட்டிங் ஸ்டைலை மாற்ற கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. தற்போது அனைத்தும் சரியாக நடந்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சி என ரயான் ரிக்கல்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.



