மீண்டும் ரோஹித், மும்பைக்கு சாதகமாக வேலையை துவங்கிய அம்பயர்கள்? ஆதாரத்துடன் ரசிகர்கள் விமர்சனம்

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே ஒன்றாம் தேதி ஜெய்ப்பூரில் 50வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தானை 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அதில் முதலில் விளையாடிய மும்பை அதிகபட்சமாக ரியன் ரிக்கல்டன் 61, ரோஹித் சர்மா 53, சூரியகுமார் யாதவ் 48*, கேப்டன் பாண்டியா 48* ரன்கள் எடுத்த உதவியுடன் 218 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தானை அபாரமாக பவுலிங் செய்த மும்பை வெறும் 117 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக கரண் சர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையும் சேர்த்து கடந்த 6 போட்டிகளில் மும்பை தொடர்ச்சியான 6 வெற்றிகளை பெற்றுள்ளது.

- Advertisement -

ரோஹித்துக்கு ஆதரவாக:

அத்துடன் மொத்தமாக 7 வெற்றிகளைப் பெற்றுள்ள அந்த அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 7 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து தடுமாற்றமாக விளையாடினார். அப்போது ராஜஸ்தான் அணி வீரர் பரூக்கி எல்பிடபிள்யூ முறையில் அவருக்கு எதிராக அவுட் கேட்டார்.

அதற்கு களத்தில் இருந்து நடுவர் கையை உயர்த்தி அவுட் கொடுத்தார். அப்போது அதை ரோஹித் ரிவ்யூ செய்வதற்காக எதிர்ப்புறமிருந்த ரிக்கல்டனிடம் ஆலோசனை கேட்டார். ஆனால் அவர் ஆலோசனை கேட்டு முடிப்பதற்குள் நிர்ணயிக்கப்பட்ட 15 நொடிகள் நேரம் முடிந்து விட்டது. இருப்பினும் அதை கவனிக்காத ரோஹித் சர்மா 0வது நொடியில் ரிவ்யூ கேட்டார்.

- Advertisement -

ரசிகர்கள் விமர்சனம்:

ஆனால் அதை 3வது நடுவர் ஏற்றுக்கொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில் 15 நொடிகள் முடிந்த பின் ரிவ்யூ கேட்டால் அதை நடுவர்கள் ஏற்கக்கூடாது என்பது அடிப்படை விதிமுறையாகும். இருப்பினும் அதை மீறி ரோகித் சர்மாவின் ரிவ்யூவை ஏற்றுக்கொண்ட மூன்றாவது நடுவர் அதை சோதித்துப் பார்த்தார். அதில் பந்து ஸ்டம்ப் லைனுக்கு நூல் அளவு வெளியே இருந்ததால் 3வது நடுவர் தீர்ப்பை மாற்றி ரோஹித் அவுட்டில்லை என்று அறிவித்தார்.

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணியிடம் நாங்க தோற்க அந்த 2 பேர் தான் காரணம் – ரியான் பராக் பேட்டி

அதைப் பார்த்த எதிரணி ரசிகர்கள் மீண்டும் அம்பயர்கள் ரோகித் மற்றும் மும்பை அணிக்கு சாதகமான வேலைகளைத் துவங்கியுள்ளதாக விமர்சிக்கிறார்கள். குறிப்பாக 15 நொடிகள் முடிந்த பின் ரோகித் ரிவியூ எடுத்ததையும் அதை நடுவர் ஏற்றுக்கொண்டதையும் ரசிகர்கள் புகைப்படமாக எடுத்துள்ள ஆதாரத்துடன் விமர்சிக்கிறார்கள். அத்துடன் ஒருமுறை ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் லசித் மலிங்கா நோ-பாலை மறைத்த 3வது அம்பயர் மும்பை வெற்றி பெற உதவியதைப் போன்ற கடந்த கால நிகழ்வுகளையும் ரசிகர்கள் ஆதாரமாக நீட்டுகின்றனர்.

Advertisement