இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த டிசம்பர் மாதத்துடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தேர்வானார். 2009 சீசனில் முதல் முறையாக அறிமுகமான அவர் 2010ஆம் ஆண்டு சிஎஸ்கே கோப்பையை வெல்வதற்கு உதவினார்.
அதற்கடுத்த வருடம் சிஎஸ்கே மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த முதல் அணி என்ற சாதனை படைக்க அஸ்வின் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக இறுதிப்போட்டியில் முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த கிறிஸ் கெய்லை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கிய அவர் சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. அப்படி சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரிஜினல் பிளேயர் அஸ்வின்:
அந்த வாய்ப்பில் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை தோனி தலைமையில் இந்தியா வெல்ல அஸ்வின் முக்கிய பங்காற்றினார். அதனால் ஹர்பஜனை கழற்றி விட்ட தோனி அவருக்கு முதன்மை ஸ்பின்னராக வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய அஸ்வின் இந்தியாவுக்காக 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்து பல சாதனைகளை படைத்து சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
அதே போல் 2015க்குப்பின் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் ஐபிஎல் அணிகளுக்காக விளையாடி வந்த அவர் கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக 9.75 கோடிக்காக மீண்டும் வாங்கப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனால் 10 வருடங்களுக்கு முந்தைய ஆட்டத்தை வெளிப்படுத்தாத அஸ்வின் சிஎஸ்கே வெற்றிகளில் பங்காற்றவில்லை. அதனால் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறி அவர் வேறு அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வாழ்த்திய ருதுராஜ்:
ஏனெனில் இப்போதும் அவரை 2 – 3 கோடிக்கு வாங்குவதற்கு பல அணிகள் தயாராக உள்ளன. அந்த சூழ்நிலையில் திடீரென ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின் வெளிநாடுகளில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தம்முடைய வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ
குறிப்பாக ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட காலகட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஒரிஜினல் வீரரான உங்களுடன் விளையாடியது கௌரவம் என்று ருதுராஜ் கூறியுள்ளார். இது பற்றி அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில். “நீங்கள் ஓஜி (ஒரிஜினல்) பிளேயராக சிஎஸ்கே அணிக்கு விளையாடியதைப் பார்த்த எனக்கு உங்களுடன் மஞ்சள் மஞ்சள் நிற ஜெர்சியில் இணைந்து விளையாடி உடை மாற்றும் அறையைப் பகிர்ந்து கொள்ளும் கௌரவம் கிடைத்தது, ஆஸ் அண்ணா. நன்றி அஸ்வின்” என்று குறிப்பிட்டுள்ளார்.



