
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 48 ரன்களையும், பிரேவிஸ் 41 ரன்களையும் குவித்தனர். பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றியை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இந்த ஸ்கோரை வைத்து நாங்கள் வெற்றி பெற்றது உண்மையிலேயே சிறப்பான ஒரு விடயம். இந்த மைதானத்தில் இந்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது என்று நினைத்தோம்.
ஏனெனில் போட்டியின் ஆரம்பத்தில் பந்து சற்று ஸ்பின் ஆனது, அதற்கு அப்புறம் நின்று வந்தது. ஆரம்பத்தில் நாங்கள் 220 ரன்கள் அடிக்கலாம் என்று நினைத்தோம். பின்னர் 210 ரன்கள் வரை வந்தால் போதும் என்று நினைத்தோம். அதன் பின்னர் 190 ரன்கள் வரை வந்தாலே போதும் என்று நினைத்தோம். அந்த அளவிற்கு மைதானத்தில் மாற்றங்கள் இருந்தன. எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் தற்போது மெல்ல மெல்ல சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளனர். அனைவருமே தற்போது ஒன்றிணைந்து தங்களது பங்களிப்பு என்ன? என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் பந்து வீசி வருகிறார்கள்.
இதையும் படிங்க : கேப்டன்சி விடயத்தில் தல தோனி எனக்கு கொடுத்த அட்வைஸ் இதுதான் – ஆயுஷ் மாத்ரே ஓபன்டாக்
மைதானத்தின் தன்மைக்கு ஏற்பவும், போட்டியின் சூழலுக்கு ஏற்பவும் அவர்கள் பந்து வீசுவதால் ஒரு அணியாக எங்களால் மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி நகர முடிகிறது. இது ஒரு நல்ல அறிகுறி தற்போது நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதால் வெற்றிகள் கிடைத்து வருகின்றன. நிச்சயம் பீல்டிங்கில் சில குறைகள் இருந்தாலும் அதையும் சரி செய்து கொண்டு இனிவரும் போட்டிகளில் இன்னும் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.