
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 73 ரன்களையும், சிவம் துபே 45 ரன்களையும் குவித்தனர். பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஆரம்பத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 43 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது :
உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் நல்ல ரன்களை குவித்திருந்தோம். அதேபோன்று இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சிரமமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பந்து பேட்டிற்கு வரவில்லை எனவே ஸ்லோவர் பந்துகளை வீசுவதால் கூடுதல் சாதகமும் இருந்தது. இந்த போட்டியின் போது எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் போதிய அளவு சிறப்பாக செயல்படவில்லை.
இதையும் படிங்க : சேப்பாக்கத்தில் இளம்வயது வீரராக மாபெரும் சாதனை நிகழ்த்திய ஆயுஷ் மாத்ரே – விவரம் இதோ
ஒருசில சமயம் நாம் நினைப்பது போன்று பந்துவீச்சு அமையும். ஒருசில சமயம் சரியான நேரங்களில் எதுவும் நடக்காது. இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும் பந்துவீச்சில் இன்னும் முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியம். பஞ்சாப் அணியின் வீரர்கள் எங்களது பந்துவீச்சு எதிராக ஆதிக்கம் செலுத்தி இந்த வெற்றியை பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக அவர்களது சிறப்பான பேட்டிங்கே இந்த தோல்விக்கு காரணம் என ருதுராஜ் கெய்க்வாட் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.