ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று தமிழகத்தின் தலைநகரான சென்னை சேப்பக்கத்தில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 217/7 ரன்கள் குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக லக்னோவுக்கு எதிராக 100 ரன்கள் (110) பார்த்து அமைத்த முதல் ஜோடியாக சாதனை படைத்த ருதுராஜ் கைக்வாட் 57 (31) ரன்களும் டேவோன் கான்வே 47 (29) ரன்களும் எடுத்தனர். அவர்களுடன் சிவம் துபே 27 (16) மொய்ன் அலி 19 (13) ராயுடு 27* (14) எம்எஸ் தோனி 12 (3) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 218 ரன்களை துரத்திய லக்னோவுக்கு 8 பவுண்டரி 2 சிக்சரை தெறிக்க விட்ட கெய்ல் மேயர்ஸ் 53 (22) ரன்கள் குவித்து மிரட்டலான தொடக்கம் கொடுத்தார்.
மிரட்டும் ருதுராஜ்:
அவரை முக்கிய நேரத்தில் காலி செய்த மொய்ன் அலி கேஎல் ராகுல் 20, க்ருனால் பாண்டியா 9, மார்கஸ் ஸ்டோனிஸ் 21 என அடுத்து வந்த முக்கிய வீரர்களையும் சொற்ப ரன்களில் காலி செய்து 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் நிக்கோலஸ் பூரான் 32, ஆயுஷ் படோனி 23 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 205/7 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ போராடி தோற்றது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் 92 ரன்கள் குவித்தும் இதர பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வி கிடைத்த நிலையில் இந்த போட்டியில் மீண்டும் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கைக்வாட் 57 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
மேலும் 2020, 2021, 2022 ஆகிய சீசன்களில் தன்னுடைய முதல் 3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த அவர் இந்த சீசனில் ஆரம்பத்திலேயே அதிரடியை துவக்கி முதலிரண்டு போட்டிகளில் 149* ரன்களை 74.50 என்ற சிறப்பான சராசரியில் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பையை தன்வசம் வைத்துள்ளார். ஏற்கனவே 2021 சீசனில் 635 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இந்த வருடம் அட்டகாசமான துவக்கத்தை பெற்றுள்ளதால் மீண்டும் அதே வேகத்தில் செயல்பட்டு 5வது கோப்பையை வெல்ல உதவுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
அதை விட பொதுவாகவே ருதுராஜ் என்றால் சற்று மெதுவாக 130 ஸ்ட்ரைக் ரேட்டில் சிக்சர்களை விட பவுண்டரிகளை அதிகமாக அடிக்கும் பேட்ஸ்மனாக அறியப்படுபவர். எடுத்துக்காட்டாக ஆரஞ்சு தொப்பியை வென்ற 2021 சீசனில் கூட 635 ரன்களை அடித்த அவர் அதை 136.26 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் தான் எடுத்தார். 2020, 2022 சீசனில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 120.71, 126.47 ஆகும். அதற்காக விமர்சனங்களையும் சந்தித்து வந்த அவர் கடுமையாக உழைத்து முன்னேறிய காரணத்தால் கடந்த விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை பறக்க விட்டு உலக சாதனை படைத்தது மறக்க முடியாது.
அந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் 4 பவுண்டரி 9 சிக்ஸரை அடித்த அவர் 2வது போட்டியிலும் 3 பவுண்டரி 4 சிக்சரை விளாசினார். அதாவது பவுண்டரியை விட அதிக சிக்சர்களை அடிக்கும் அவர் தனது கேரியரில் உச்சகட்டமாக இந்த சீசனில் 183.95 என்ற சரவெடியான ஸ்ட்ரைக் ரேட்டிலும் பேட்டிங் செய்ய துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க:CSK vs LSG : சி.எஸ்.கே அணிக்கு 5 ரன்கள் பெனால்டி கொடுத்திருக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர் காட்டம்
அந்தளவுக்கு டைமிங்கில் வெறித்தனமாக அடிக்க துவங்கியுள்ள அவர் பறக்க விட்ட ஒரு சிக்சர் சேப்பாக்கம் மைதானத்தில் ஸ்பான்சர்ஷிப் நிறுவனம் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பட்டு பதம் பார்த்தது. மொத்தத்தில் காரை கொண்டு போய் வெளியே நிறுத்துங்கள் என்று சொல்லும் அளவுக்கு ஒரு கட்டத்தில் அம்பியாக இருந்த ருதுராஜ் தற்போது அந்நியனாக செயல்படுவது ரசிகர்களுக்கு வியப்பாகவே இருக்கிறது.