மீண்டும் அனல் தெறிக்கும் சதமடித்த ருதுராஜ் – புதிய நாக் அவுட் நாயகனாக மிரட்டல், உ.கோ’யில் சான்ஸ் கிடைக்குமா

Ruturaj gaikwad.jpeg
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2022 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நவம்பர் 28ஆம் தேதியன்று நடைபெற்ற காலிறுதியில் தமிழகம் தோல்வியடைந்து வெளியேறி நிலையில் மகராஷ்டிரா உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அந்த நிலையில் நவம்பர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் அசாம் அணிகள் மோதின. சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு தொடக்க வீரர் ராகுல் திரிபாதி 3 (17) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

அந்த நிலையில் வந்த சத்யஜீத் பச்சவ் ஓரளவு நிலையாக நின்று 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய அன்கிட் பாவ்னே மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கைக்வாத் உடன்  கைகோர்த்து அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார். 3வது விக்கெட்டுக்கு ஜோடி போட்டு அசாம் பவுலர்களை அடித்து நொறுக்கிய இந்த ஜோடியில் ஒரு கட்டத்திற்கு பின் இருவருமே சதமடித்து 207 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை வலுப்படுத்தினார்கள். அதில் இந்த தொடரில் ஏற்கனவே அடுத்தடுத்த சதங்களை அடித்து உத்திர பிரதேஷ் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்க விட்டு இரட்டை சதமடித்த ருதுராஜ் இப்போட்டியிலும் சதமடித்து எதிரணி பவுலர்களை ஓயாமல் வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

தெறிக்கும் ஸ்பார்க்:
தொடக்க வீரராக களமிறங்கி 44 ஓவர்கள் வரை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து பந்தாடிய அவர் 18 பவுண்டரி 6 சிக்ஸருடன் 168 (126) ரன்களை 133.33 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஒரு வழியாக ஆட்டமிழந்தார். அவருடன் அசத்திய பாவ்னே தனது பங்கிற்கு 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 110 (89) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மகாராஷ்டிரம் 350/7 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் மீண்டும் வெளுத்து வாங்கிய ருதுராஜ் கடந்த 2021 முதல் இதுவரை களமிறங்கிய விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் முறையே 136, 154*, 124*, 21, 168, 124*, 40, 220*, 168 என ரன் மெசினாக பெரிய ரன்களை அசால்டாக அடித்து பேட்டில் அனலை தெறிக்கவிட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக இந்த வருடம் மிரட்டும் அவர் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆகிய 2 முக்கியமான நாக் வுட் போட்டிகளில் கேப்டனாக முன்னின்று 220*, 168 என அடுத்தடுத்த சதங்களை விளாசியுள்ளார். இதிலிருந்து அழுத்தமான பெரிய போட்டிகளில் தம்மால் பெரிய ரன்களை குவித்து சாதிக்க முடியும் என்பதை ருதுராஜ் இந்திய அணி நிர்வாகத்துக்கும் தேர்வு குழுவுக்கும் நிரூபித்துள்ளார். சொல்லப்போனால் தொடர்ச்சியான ரன் குவிப்பால் அவர் தேர்வுக்குழுவினரின் கதவை வலுவாக அடித்து நொறுக்குகிறார் என்றே கூறலாம். முன்னதாக சமீப காலங்களில் ஐசிசி உலக கோப்பை தொடர்களில் லீக் சுற்றில் அசத்தும் நட்சத்திர வீரர்கள் நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்து வருகிறார்கள்.

- Advertisement -

அதனால் ஏற்கனவே கடுப்பாகி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்து வரும் ரசிகர்கள் இவரது ஆட்டத்தை பார்த்து 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் தொடக்க வீரராக வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள். இத்தனைக்கும் ஏற்கனவே இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் தடுமாறினாலும் தற்சமத்தில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி உச்சகட்ட பார்மில் இருக்கிறார்.

அதனால் யோசிக்காமல் ஆரம்பத்தில் யாருமே தடுமாறுவார்கள் என்பதை உணர்ந்து மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் கூறுகிறார்கள். அதே போல் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஸ்பார்க் போல செயல்பட்டு தனது திறமையை நிரூபித்துள்ள அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் கேப்டனாகவும் அசத்துவதால் தோனிக்கு பின் அடுத்த தலைமுறை கேப்டனாக நியமிக்குமாறு அந்த அணி ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement