
இந்தியாவின் புகழ்பெற்ற துலீப் கோப்பை 2025 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் செப்டம்பர் நான்காம் தேதி பெங்களூருவில் செமி ஃபைனல் சுற்று துவங்கியது. அதில் 2வது செமி ஃபைனல் போட்டியில் மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு மண்டலம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கு மண்டல அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஜெய்ஸ்வால் 4 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவருடன் களமிறங்கிய ஹர்விக் தேசாய் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 10/2 என ஆரம்பத்திலேயே மேற்கு மண்டலம் தடுமாறியது. அப்போது ஆர்யா தேசாய் – ருதுராஜ் கைக்வாட் நிதானமாக விளையாடினர்.
3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் தேசாய் 39 ரன்களில் அவுட்டான போதிலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் அரை சதத்தை அடித்தார். அடுத்ததாக வந்த மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 28 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.
ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 131 பந்துகளில் அபாரமான சதத்தை அடித்து அசத்தினார். எதிர்ப்புறம் வந்த சம்ஸ் முலானி 18 ரன்களில் அவுட்டான போதிலும் தானுஷ் கோட்டியான் நங்கூரமாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்து அசத்திய ருதுராஜ் 150 ரன்களை தாண்டி இரட்டை சதத்தை நெருங்கிய போது 25 பவுண்டரி 1 சிக்சருடன் 184 (206) ரன்கள் குவித்து ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார்.
உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் இந்தியாவுக்காக அறிமுகமான ருதுராஜ் 2023 கௌகாத்தி டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதத்தை அடித்து அதிகபட்ச ஸ்கோர் (123*) பதிவு செய்து சாதனை படைத்தார். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவருடைய தலைமையில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. இருப்பினும் கடந்த வருடம் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் பலரும் தேர்வுக்குழுவை விமர்சித்தனர்.
இதையும் படிங்க: இது என்ன முட்டாள் தனம்.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி குறித்த வதந்திக்கு – சந்தீப் சர்மா நேரடி கருத்து
கடந்த ஐபிஎல் தொடரில் காயத்தால் பாதியிலேயே வெளியேறிய ருதுராஜ் தற்போது மீண்டும் சிறப்பாக விளையாடி வரும் அக்டோபரில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தம்மை தேர்ந்தெடுக்குமாறு தேர்வுக்குழுவின் கதவை தட்டத் துவங்கியுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் முதல் நாள் முடிவில் மேற்கு மண்டலம் 363/6 ரன்கள் எடுத்து வலுவான துவக்கத்தைப் பெற்றுள்ளது. களத்தில் அரை சதத்தை அடித்து 65* ரன்கள் குவித்துள்ள தானுஷ் கோட்டியானுடன் கேப்டன் சர்துல் தாக்கூர் 24* ரன்களுடன் உள்ளார்.