இப்படி நடந்து ரொம்ப நாள் ஆச்சு.. கண்டிப்பா என்கிட்ட இருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் வரும் – ருதுராஜ் அதிரடி

Ruturaj
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து பெரிய பின்னடைவை சந்தித்திருந்தனர். பின்னர் ஏப்ரல் 11-ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்திருந்தனர்.

என்னுடைய பேட்டில் இருந்து பெரிய இன்னிங்ஸ் வரும் : ருதுராஜ் நம்பிக்கை

அதனை தொடர்ந்து ஏப்ரல் 14-ஆம் தேதியான நேற்று மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் தற்போது 5 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் எட்டாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

- Advertisement -

இனிவரும் போட்டிகளில் இதேபோன்று தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் பட்சத்தில் சென்னை அணியின் பிளேஆப் வாய்ப்பும் உயிர்ப்புடன் இருக்கும் என்பதனால் இனிவரும் போட்டிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி தற்போது மெல்ல மெல்ல சிறப்பான செயல்பாட்டிற்கு திரும்பி வரும் வேளையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தும் விடயமாக இருந்து வருகிறது.

ஏனெனில் இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் முதல் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் வெறும் 12 ரன்கள் சராசரியுடன், 105 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 63 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதன் காரணமாக இனிவரும் போட்டிகளில் அவர் எவ்வாறு விளையாடப்போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த வெற்றிக்கு பின்னர் தனது தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் குறித்தும் ருதுராஜ் கெய்க்வாட் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போது சி.எஸ்.கே அணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வருவதில் மகிழ்ச்சி. இப்படி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று நீண்ட நாள் ஆகிவிட்டது. என்னுடைய தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் குறித்து எந்த ஒரு கவலையும் என்னிடம் இல்லை. ஏனெனில் அணி தற்போது வெற்றிகளை நோக்கி நகர்ந்து வரும்போது நானும் உடலளவிலும், மனதளவிலும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன்.

இதையும் படிங்க : நேற்றைய போட்டியில் எடுத்த 3 விக்கெட்டுகளின் மூலம் முக்கிய மைல்கல்லை தொட்ட – ஆப்கான் வீரர் நூர் அகமது

எனவே நிச்சயம் தேவையான நேரத்தில் என்னிடம் இருந்து ரன்கள் வரும். இந்த வெற்றிகளை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு ஒரு பெரிய இன்னிங்ஸ்ஸை விளையாட காத்திருக்கிறேன். வெகு விரைவில் என்னிடம் இருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் வரும். அதோடு நான் நல்ல ரன் குவிப்பையும் தொடர்ந்து வழங்குவேன் என ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement