ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாற்றமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் தவித்து வருகிறது. அந்த சூழ்நிலையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் விலகியுள்ளது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே தடுமாறி வரும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் துறையில் அவர் தான் ஓரளவு தொடர்ச்சியாக அசத்தக்கூடிய பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.
இருப்பினும் முழங்கையில் எலும்பு முறிவு காயத்தை சந்தித்துள்ளதால் ருதுராஜ் மேற்கொண்டு விளையாட முடியாது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அறிவித்தார். அது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதே காரணத்தால் ஜாம்பவான் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மீண்டும் சென்னையில் வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ருதுராஜ் விலகல்:
இந்நிலையில் காயத்தால் வெளியேறுவது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாக ருதுராஜ் தெரிவித்துள்ளார். இருப்பினும் இளம் விக்கெட் கீப்பர் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று அவர் கூறியுள்ளார். எனவே காயத்தால் வீட்டுக்கு கிளம்பாமல் தொடர்ந்து சிஎஸ்கே அணியுடன் இருந்து ஆதரவு கொடுக்க உள்ளதாகவும் ருதுராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும் தமக்கு ஆதரவு கொடுத்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “துரதிஷ்டவசமான முழங்கை காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சியப் போட்டிகளை தவற விடுவதில் நான் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆம் இது நமக்கு சவாலான சீசனாக இருக்கிறது”
தோனி தலைமையில்:
“ஆனால் இங்கிருந்து இளம் விக்கெட் கீப்பர் நமது அணியை வழி நடத்த உள்ளார். எனவே அனைத்தும் திரும்பும் என்று நம்பலாம். காயத்தைச் சந்தித்தாலும் நான் சிஎஸ்கே அணியுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன். இந்த சூழ்நிலையிலிருந்து நான் சிஎஸ்கே அணியை வெளியே எடுக்க விரும்பினேன். ஆனால் காயம் போன்ற விஷயங்கள் எப்போதும் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது”
இதையும் படிங்க: டெல்லி அணியை வீழ்த்திய பின்னர் ஆவேசமாக வெற்றியை கொண்டாடிய கே.எல் ராகுல் – என்ன அர்த்தம் தெரியுமா?
“நமது வீரர்களுக்காக எஞ்சிய ஐபிஎல் தொடரில் ஆதரவு கொடுப்பதற்காக காத்திருக்கிறேன். நாம் இந்தத் தொடரை வலுவாக முடிப்போம்” என்று நம்பிக்கையுடன் கூறினார். மொத்தத்தில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த தோனி தலைமையில் சென்னை எஞ்சிய 9 போட்டிகளில் விளையாட உள்ளது. அவருடைய தலைமையில் சென்னை வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.



