சண்டிகார் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியிடம் மீண்டும் ஒரு தோல்வியை பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வெற்றியுடன் ஆரம்பித்த சென்னை அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
டேவான் கான்வே வெளியேறியது ஏன்? ருதுராஜ் விளக்கம் :
அதிலும் குறிப்பாக 180 ரன்களுக்கு மேல் சேசிங் என்றாலே சென்னை அணி தடுமாறி வருவது அப்பட்டமாக தெரிகிறது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்தது. பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அதிரடியாகவே சென்னை அணி விளையாடி இருந்தாலும் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் துவக்க வீரரான டேவான் கான்வே 49 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 69 ரன்கள் எடுத்திருந்த வேளையில் 18-வது ஓவரின் கடைசி பந்தில் ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறியிருந்தார். அவர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜடேஜா உள்ளே வந்தார். அப்போது வெற்றிக்கு 13 பந்துகளில் 49 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. ஆனாலும் வெற்றி இலக்கை சென்னை அணியால் எட்டமுடியவில்லை.
இப்படி இறுதி கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த டேவான் கான்வே வெளியேற்றப்பட்டு ஜடேஜா உள்ளே வந்ததற்கு என்ன காரணம்? என்பது குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டி முடிந்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டேவான் கான்வே மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் தான். ஆனாலும் அவர் டாப் ஆர்டரில் விளையாடக்கூடியவர்.
இதையும் படிங்க : எனக்கா அபராதம் போடுறீங்க.. பி.சி.சி.ஐ-யை டீசிங் செய்யும் விதமாக விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட – திக்வேஷ் ரதி
அதேவேளையில் ஜடேஜாவின் ரோல் வித்தியாசமானது. அவர் போட்டியை சிறப்பாக முடித்துக் கொடுக்கக் கூடியவர். டாப் ஆர்டரில் இறங்கி விளையாடிய கான்வே கடைசி கட்டத்தில் சற்று சிரமத்தை எதிர்கொண்டதாலே அந்த மாற்றம் தேவை என்று நினைத்து ஜடேஜாவை உள்ளே அனுப்பினோம் இதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.



