இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மோதிய வேளையில் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றியை பெற்றிருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களை குவித்தது.
பி.சி.சி.ஐ-யை கிண்டல் செய்யும் வகையில் கொண்டாடிய திக்வேஷ் ரதி :
பின்னர் 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக 4 ரன்கள் வித்யாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் கையில் இருந்த வெற்றியை கொல்கத்தா அணியின் வீரர்கள் தாமாகவே லக்னோ அணிக்கு பரிசாக அளித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது லக்னோ அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான திக்வேஷ் ரதி கொல்கத்தா வீரர் சுனில் நரேன் விக்கெட்டை வீழ்த்தியதும் வித்தியாசமான முறையில் அந்த விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரில் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின் போது பிரியான்ஷ் ஆர்யா விக்கெட்டை வீழ்த்திய அவர் நோட் புக் செலிப்ரேஷன் முறையில் ஆக்ரோஷமாக விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்கு பிசிசிஐ போட்டி ஊதியத்தில் இருந்து 25% அபராதம் விதித்தது. ஆனாலும் அதற்கடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான நமன் தீர் விக்கெட்டை வீழ்த்தியதும் மீண்டும் அதே முறையில் விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக அவருக்கு போட்டியில் ஊதியத்தில் இருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோன்று மூன்று டி மெரிட் புள்ளிகளையும் பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சுனில் நரேன் விக்கெட்டை வீழ்த்தியதும் அவரது முகத்திற்கு நேராக நோட்புக் செலிப்ரேஷனில் ஈடுபடுவதை தவிர்த்து தரையில் அமர்ந்து அதில் ஏதோ எழுதுவது போல விக்கட்டை கொண்டாடி இருந்தார். அவரது இந்த செயலை பார்க்கும்போது ஏற்கனவே தனக்கு 2 முறை அபராதம் விதிக்கப்பட்டதால் பிசிசிஐ-யை கிண்டல் செய்யும் விதமாக தற்போது தரையில் எழுதி அந்த விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது போல தெரிகிறது.
இதையும் படிங்க : சி.எஸ்.கேவை சிதறடித்து சதமடித்த 24 வயது பஞ்சாப் வீரர்.. யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? – சுவாரசிய தகவல் இதோ
ஏற்கனவே மூன்று டி மெரிட் புள்ளிகளை பெற்றுள்ள அவர் ஒருவேளை இந்த விக்கெட் கொண்டாட்டத்திற்கும் தண்டிக்கப்பட்டு மற்றொரு டி மெரிட் புள்ளியை பெற்றால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



