சி.எஸ்.கே அணி 5வது சாம்பியன் பட்டத்தை வென்றதும் ருதுராஜ் கெய்க்வாட் ஜெர்சியில் செய்த இந்த மாற்றத்தை – கவனித்தீர்களா?

Ruturaj Gaikwad CSk.jpeg
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ள ஐபிஎல் 2023 டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக வென்றது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இத்தொடரின் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் குஜராத் தங்களுடைய கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் சென்னையை எதிர்கொண்டது. இந்த சீசனின் முதல் போட்டியிலேயே அந்த மைதானத்தில் சென்னையை வீழ்த்தி சுப்மன் கில், ஷமி போன்ற ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பிகளை வென்ற வீரர்களை வைத்திருந்ததால் அப்போட்டியில் குஜராத்தே வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றார் போல் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி சாய் சுதர்சன் 96 (47) ரன்கள் குவித்த அதிரடியில் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் மீண்டும் மழை பெய்ததால் 15 ஓவரில் 171 ரன்கள் என்ற புதிய இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26, டேவோன் கான்வே 47, சிவம் துபே 32*, ரகானே 27, ராயுடு 19 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்த போதிலும் கடைசி ஓவரில் மோகித் சர்மா துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி வெற்றியின் குறுக்கே நின்றார்.

- Advertisement -

ருதுராஜின் சிஎஸ்கே அன்பு:
இருப்பினும் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸரும் பவுண்டரியும் அடித்த ரவீந்திர ஜடேஜா சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற பரம எதிரியான மும்பையின் ஆல் டைம் சாதனையை சென்னை சமன் செய்தது அந்த அணி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அந்த வெற்றியை உறுதி செய்த ஜடேஜாவை தம்முடைய இடுப்பில் தூக்கி தோனி கொண்டாடியது மறக்க முடியாததாக அமைந்தது.

அதை விட 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுமே கோப்பையை கையில் தொடுவதற்கு முன்பாக நம்பிக்கை நட்சத்திர இளம் வீரர் ருத்ராஜ் கைக்வாட் தம்முடைய ஜெர்சியில் பேனாவை எடுத்து சென்னை அணியின் லோகாவுக்கு மேலே இருக்கும் 4 நட்சத்திரங்களுடன் 5வது நட்சத்திரத்தை தாமே வரைந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதாவது ஏற்கனவே வென்ற 4 சாம்பியன் பட்டங்களை குறிக்கும் வகையில் சென்னை அணியின் புகழ் பெற்ற சிங்கத்தின் லோகோவுக்கு மேலே 4 நட்சத்திரங்கள் வரிசையாக பொறிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வரிசையில் தற்போது 5வது கோப்பையை வென்றுள்ளதால் விரைவில் சென்னை அணியின் ஜெர்சியில் 5வது நட்சத்திரம் சேர்க்கப்பட உள்ளது. சொல்லப்போனால் என்ன தான் இந்த வருடம் கோப்பையை வென்றாலும் அடுத்த வருடம் களமிறங்கும் போது புதிய ஜெர்சி தயாரிக்கும் போது தான் அந்த 5வது நட்சத்திரம் சேர்க்கப்படுவது வழக்கமாகும். ஆனால் அதற்கு முன்பாகவே 5 கோப்பைகளை வென்ற பெருமையை உடனடியாக உணர நினைத்த ருதுராஜ் தமது கையாலேயே பேனாவால் 5வது நட்சத்திரத்தை வரைந்து கொண்டது சென்னை மீதான அவரது அன்பையும் பிணைப்பையும் காட்டுகிறது என்றே சொல்லல்லாம்.

மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த 2020 சீசனில் முதல் முறையாக சென்னைக்கு வாங்கப்பட்டார். அந்த சீசனில் வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த போதிலும் கடைசி கட்ட போட்டிகளில் மிரட்டலாக செயல்பட்ட அவர் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும் அவமானத்திலிருந்து சென்னையை காப்பாற்றினார். அதை விட 2021 சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் சென்னை 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க:WTC Final : இப்போதான் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும் – எச்சரித்த சுனில் கவாஸ்கர்

அதன் காரணமாக இந்தியாவுக்காக சர்வதேச அளவில் விளையாடும் வாய்ப்பையும் பெற்ற அவர் கடந்த சீசனில் சுமாராக செயல்பட்டாலும் இந்த வருடம் மீண்டும் 590 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த சென்னை வீரராக சாதனை படைத்து 5வது கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார். அப்படி இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்து தனது கேரியரில் முக்கிய பங்காற்றி வரும் சென்னை அணியின் மீதான அன்பு காரணமாகவே அவர் 5வது நட்சத்திரத்தை முன்கூட்டியே வரைந்து பெருமையுடன் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement