
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு மே 28இல் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்து பின்னடைவை சந்தித்த அந்த அணி இம்முறை லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு எதிராக நடைபெற்ற குவாலிபயர் 1 பிளே ஆப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி வரலாற்றில் 10வது முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் ருதுராஜ் கைக்வாட் 60 (44) டேவோன் கான்வே 40 (34) என தொடக்க வீரர்களின் பொறுப்பான ரன் குவிப்பால் 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில் 42 (38) ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் சென்னையின் தரமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர்.
சச்சினை முந்தி:
அதனால் குஜராத்தை 157 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய முதல் அணியாக சாதனை படைத்த சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், தீக்சனா, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு சவாலான பிட்ச்சில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 60 (44) ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய ருதுராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் கடந்த 2020இல் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை முதல் முறையாக இழந்த சென்னையை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பதிலிருந்து அபாரமாக செயல்பட்டு காப்பாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார்.
அதை தொடர்ந்து 2021 சீசனில் 635 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் கடந்த வருடம் கொஞ்சம் தடுமாறினாலும் இந்த சீசனில் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே 92 ரன்கள் விளாசி அதிரடியை துவங்கிய 564* ரன்கள் குவித்து சென்னை ஃபைனல் செல்வதற்கு முக்கிய காரணமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் சென்னையின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அவர் நேற்றைய போட்டியில் எடுத்த 60 ரன்களை சேர்த்து இதுவரை 50 இன்னிங்ஸில் 1771* ரன்களை எடுத்துள்ளார்.
1. அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் முதல் 50 இன்னிங்ஸ்களுக்கு பின் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ருதுராஜ் கைக்வாட் : 1771 (135 ஸ்ட்ரைக் ரேட்)
2. சச்சின் டெண்டுல்கர் : 1683 (119)
3. கேஎல் ராகுல் : 1601 (137)
4. ரிஷப் பண்ட் : 1591 (162)
5. சுரேஷ் ரெய்னா : 1494
2. அத்துடன் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஒரு குறிப்பிட்ட சீசனில் 500 ரன்கள் எடுத்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் முரளி விஜய் 2010இல் 441 ரன்களும் 2011இல் 434 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாகும்.
3. அத்துடன் 2021 சீசனில் 635 ரன்கள் எடுத்த அவர் இம்முறை 564* ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 2 சீசன்களில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த முதல் சென்னை வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் மைக் ஹசி, முரளி விஜய், டு பிளேஸிஸ் உட்பட சென்னைக்காக விளையாடிய வேறு எந்த தொடக்க வீரர்களும் 2 சீசன்களில் 500+ ரன்கள் எடுத்ததில்லை.
4. மேலும் தோனி 15, ஜடேஜா 14, ரெய்னா 12 ஆகிய ஜாம்பவான்கள் 15 வருடங்களில் சென்னைக்காக மேற்குறிப்பிட்ட ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள நிலையில் இவர் வெறும் 3 வருடத்திலேயே 10 ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
இதையும் படிங்க:IPL 2023 : தோனிக்கு மட்டும் ஒரு நியாயமா? அம்பயர்கள் ஏன் தட்டி கேட்காம சிரிச்சாங்க – முன்னாள் ஆஸி வீரர் விளாசல்
5. அத்துடன் ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் (278*) என்ற விராட் கோலியின் (232) சாதனையும் அவர் தகர்த்துள்ளார்.