ராகுலை முந்தி.. வியந்து பார்த்த தல தோனியின் 11 வருட சாதனையை உடைத்த ருதுராஜ் 2 அதிரடி சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற 29வது லீக் போட்டியில் மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை வீழ்த்தியது. அதனால் தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்த சென்னை புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 69 (40), சிவம் துபே 66* (38), தோனி 20* (4) ரன்கள் எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த மும்பைக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து 105* (63) ரன்கள் குவித்து போராடினார்.

- Advertisement -

ருதுராஜ் சாதனை:
ஆனால் கேப்டன் பாண்டியா சூரியகுமார் யாதவ் திலக் வர்மா உள்ளிட்ட இதர வீரர்கள் எதிர்ப்புறம் பெரிய ரன்கள் எடுத்த தவறினர். அதனால் 20 ஓவரில் மும்பை 186/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்த பதிரனா ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இந்த வருடம் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ருதுராஜ் ஆரம்பக்கட்ட போட்டிகளில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினார்.

இருப்பினும் இப்போட்டியில் வித்தியாச முயற்சியாக ஓப்பனிங்கில் களமிறங்கிய ரஹானே அவுட்டானதும் வந்த அவர் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக ரச்சின் ரவீந்திராவுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சிவம் துபேவுடன் இணைந்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னை 200 ரன்கள் அடிப்பதற்கான அடித்தளத்தை அமைத்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆகாஷ் மாதவால் வீசிய ஒரு பந்தில் ஆன் சைட் ஒதுங்கி வந்து ஆஃப் சைட் திசையில் அவர் பறக்க விட்ட ஃபிளாட்டான சிக்சரை பார்த்து ஃபெவிலியனில் இருந்த ஜாம்பவான் தோனி வியப்பான ரியாக்சன் கொடுத்தார். அந்த வகையில் மொத்தமாக 5 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதமடித்த ருதுராஜ் 69 (40) ரன்களை 172.50 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

மேலும் இதுவரை ஐபிஎல் தொடரில் அவர் 57 இன்னிங்ஸில் 2021* ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற கே.எல் ராகுல் சாதனையை உடைத்துள்ள ருதுராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ருதுராஜ் கைக்வாட் : 57
2. கேஎல் ராகுல் : 60
3. சச்சின் டெண்டுல்கர் : 63
4. ரிஷப் பண்ட் : 64
5. கௌதம் கம்பீர் : 68

இதையும் படிங்க: அடிக்கவேண்டிய ஸ்கோர் தான்.. ஆனா தோனி இருக்காரே அவரு எல்லாத்தையும் மாத்திடுறாரு.. பாண்டியா பேட்டி

அத்துடன் ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் (69) பதிவு செய்த சென்னை கேப்டன் என்ற தோனியின் சாதனையும் அவர் உடைத்தார். இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு மும்பைக்கு எதிராக தோனி 63* ரன்கள் அடித்ததே முந்திய சாதனையாகும்.

Advertisement