
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்று முன்னிலைப் பெற்ற நிலையில் 2வது போட்டி அக்டோபர் 20ஆம் தேதி துவங்கியது. ராவல்பிண்டி மைதானத்தில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 333 ரன்கள் குதித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 87, அப்துல்லா சபிக் 57, சௌத் ஷாகீல் 66, சல்மான் ஆகா 45 ரன்கள் எடுத்தார்கள். அவர்களது நல்ல ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 316/5 என்ற வலுவான நிலையிலிருந்த பாகிஸ்தானை 333க்கு சுருட்டிய தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜா 7 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் மார்க்ரம் 32, ரியன் ரிக்கல்டன் 14 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 76, டோனி டீ ஜோர்சி 55 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஆனாலும் லோயர் ஆர்டரில் தேவால்ட் ப்ரேவிஸ் 0, கெய்ல் வேரைன் 10, ஹர்மர் 2, மார்கோ யான்சென் 12 ரன்களுள் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர்.
அதனால் 235/8 என தடுமாறிய தென்னாப்பிரிக்கா 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது 7வது இடத்தில் நங்கூரமாக விளையாடிய சேனுரான் முத்துசாமியுடன் சேர்ந்து 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேசவ் மகாராஜ் 30 ரன்களை அடித்து அவுட்டானார். அடுத்து வந்த ககிசோ ரபாடா பாகிஸ்தானை அடித்து நொறுக்கி 38 பந்தில் அரை சதத்தை அடித்து 71 (61) ரன்கள் விளாசினார்.
அவருடன் முத்துசாமி 89* ரன்கள் அடித்ததால் தென்னாப்பிரிக்கா 404 ரன்களை எடுத்து 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆசிப் ஆசிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய பாகிஸ்தானை அபாரமாக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா வெறும் 138 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஹர்மர் 6, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையும் படிங்க: 264 ரன்ஸ்.. கிறிஸ் கெய்ல் சேனா சாதனையை சமன் செய்த ரோஹித்.. ஆஸியை போராடி அடித்த இந்தியா
இறுதியில் 68 என்ற இலகுவான இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்காவை ரிக்கல்டன் 25*, ஐடன் மார்க்ரம் 42 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதிலிருந்து டெய்ல் எண்டரான ரபாடா அடித்த 71 ரன்கள் பாகிஸ்தான் தோல்விக்கு முக்கிய காரணமானது என்றே சொல்லலாம். இதனால் 2007க்குப்பின் 18 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் ஒரு டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வரலாற்று வெற்றியை பெற்றது. அத்துடன் 1 – 1 (2) என்ற கணக்கில் பாகிஸ்தானை வெற்றி பெற விடாமல் இத்தொடரை தென்னாபிரிக்கா சமன் செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.