தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி கேப் டவுன் நகரில் ஜனவரி 3ஆம் தேதி துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 615 ரன்கள் குவித்து அட்டகாசம் செய்தது. அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் இரட்டை சதம் அடித்து 259 ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் தெம்பா பவுமா சதத்தை விளாசி 106, கெய்ல் வேரின் சதத்தை பதிவு செய்து 100 ரன்கள் அசத்தினார்கள். பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக சல்மான் ஆகா, முகமது அப்பாஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பாகிஸ்தான் பாலோ ஆன்:
அடுத்ததாக களம் இறங்கிய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி 194 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது. அதிகபட்சமாக பாபர் அசாம் 58, முகமது ரிஸ்வான் 46 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அடுத்ததாக 421 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா மீண்டும் பேட்டிங் செய்யுமாறு பாகிஸ்தான் அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது. அப்போது களமிறங்கிய பாகிஸ்தானுக்கு கேப்டன் சான் மசூத் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அந்த இருவருமே மிகவும் பொறுப்பாக விளையாடி அரை சதத்தை அடித்தார்கள்.
உலக சாதனை போராட்டம்:
நேரம் செல்ல செல்ல தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடி 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது பாபர் அசாம் 81 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய மசூத் சதத்தை அடித்தார். அப்போது நிறைவுக்கு வந்த மூன்றாவது நாள் முடிவில் 213-1 ரன்கள் எடுத்திருக்கும் பாகிஸ்தானுக்கு களத்தில் மசூத் 102*, சேஷாத் 8* ரன்களுடன் உள்ளனர்.
இதையும் படிங்க: சுத்துற பிளேயர்ஸ் இந்தியாவுக்கு வேண்டாம்.. இதை செய்ங்க இல்லனா கழற்றி விடுங்க.. பிசிசிஐயை சாடிய கவாஸ்கர்
தற்போதைய நிலையில் 208 ரன்கள் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் இங்கிருந்து 400 – 500 ரன்கள் அடித்தால் மட்டுமே மேஜிக் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த போட்டியில் 205 ரன்கள் குவித்த பாபர் அசாம் – ஷான் மசூத் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஃபாலோ ஆன் பெற்ற பின் அதிக ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 2008இல் தென்னாப்பிரிக்காவின் கிராம் ஸ்மித் – நெய்ல் மெக்கன்சி 204 ரன்கள் அடித்ததே முந்தைய உலக சாதனை.



