
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கெளஹாத்தியில் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஐடன் மார்க்ரம் 38 ரன்னில் அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய ரியான் ரிக்கல்ட்டன் 35 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
மிடில் ஆர்டரில் கேப்டன் தெம்பா பவுமா நிதானமாக விளையாடி 41, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 49 ரன்கள் குவித்து அசத்தினார்கள். டோனி டீ ஜோர்சி 28, வியன் முல்தார் 13 ரன்களில் அவுட்டானார்கள். 7வது இடத்தில் நங்கூரமாக விளையாடிய சீனுரான் முத்துசாமி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். அவருடன் இணைந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கெய்ல் வெர்ரைன் 45 ரன்களை குவித்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த மார்க்கோ யான்சன் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய முத்துசாமி தன்னுடைய முதல் சதத்தை அடித்து 10 பவுண்டரி 2 சிக்சருடன் 109 ரன்களை குவித்து ஒரு வழியாக அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்கோ யான்சென் வேகமாக ரன்கள் குவித்து அரை சதத்தை அடித்தார்.
எதிர்ப்புறம் வந்த சைமன் ஹார்மர் 5 ரன்னில் பும்ரா வேகத்தில் போல்டானார். ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து இந்திய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட யான்சன் சதத்தை நெருங்கிய போது 6 பவுண்டரி 7 சிக்ஸருடன் 93 (91) ரன்களில் போல்டானார். அதனால் ஏமாற்றத்துடன் சென்ற அவருடன் கேசவ் மஹராஜ் 12* ரன்கள் எடுத்ததால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்து அசத்தியது.
இந்திய அணிக்கு குல்தீப் யாதவ் 4, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ரவீந்திர தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முன்னதாக இப்போட்டியின் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த தென்னாப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை யான்சென் சமன் செய்தார். இதற்கு முன் 2009 கேப் டவுன் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏபி டீ வில்லியர்ஸ், 2021 க்ராஸ் ஐஸ்லெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக குவிண்டன் டீ காக் ஆகியோரும் தலா 7 சிக்சர்கள் அடித்துள்ளார்கள்.
இதையும் படிங்க: இந்தியாவிலும் சிலர் இப்படி பொறுப்பின்றி இருக்காங்க.. டிராவிட் வார்த்தைகளை வைத்து பஸ்பால் விமர்சித்த அஸ்வின்
மேலும் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 9வது இடத்தில் களமிறங்கி 2வது அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் யான்சென் படைத்துள்ளார். அந்த உலக சாதனை பட்டியலில் 2008ஆம் ஆண்டு நேப்பியர் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் டிம் சவுதி 8 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.