ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 172 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலியாவை 132 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 40 ரன்கள் முன்னிலையாகப் பெற்றதால் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2வது இன்னிங்ஸில் சுமாராக விளையாடிய அந்த அணி 164 ரன்கள் மட்டுமே எடுத்து 205 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதை 28.2 ஓவரில் சேசிங் செய்து வென்ற ஆஸ்திரேலியா பஸ்பாஸ் என்ற பெயரில் அதிரடியாக விளையாடுகிறோம் என்று சொல்லக்கூடிய இங்கிலாந்துக்கு உண்மையான அதிரடியாக காட்டியது. இந்நிலையில் 40 ரன்கள் முன்னிலையாகப் பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
பொறுப்பற்ற இங்கிலாந்து:
அதை செய்யாமல் பொறுப்பின்றி விளையாடி தோற்ற இங்கிலாந்தை போல இந்திய அணியிலும் சில வீரர்கள் இருப்பதாகவும் அஸ்வின் விமர்சித்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து செய்த தவறை முன்னாள் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்த வார்த்தைகள் வைத்து அவர் சுட்டிக் காட்டியது பின்வருமாறு. “பொறுப்பற்றத்தன்மை என்ற வார்த்தை எவ்வளவு போதுமானதாக இருக்கும்? ஏனெனில் தோல்விக்கு அங்கே பல விஷயங்கள் உள்ளன”
“இந்திய அணியில் கூட அடுத்த தலைமுறை வீரர்களில் சிலர் இப்படி இருக்கிறார்கள். அதாவது ஃபீல்டர்கள் பவுண்டரி எல்லையில் இருந்தாலும் அவர்கள் ரிஸ்க் எடுத்து தூக்கி அடிக்கப் பார்க்கிறார்கள். அவர்களது பெயர்களை நான் சொல்ல விரும்பவில்லை. ஒரு பேட்டிங் துறையாக நீங்கள் எவ்வளவு பொறுப்பின்றி இருக்க முடியும்? ஏனெனில் முதல் நாளிலேயே 172க்கு அவுட்டான உங்களுக்கு உங்களது பவுலர்கள் எதிரணியுடன் போரிட்டு 40 ரன்கள் முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தனர்”
அஸ்வின் விமர்சனம்:
“அப்போது ஒரு பேட்டிங் துறையாக நீங்கள் உங்களுடைய பவுலர்களுக்கு போதுமான ஓய்வை கொடுப்பதே முதல் வேலையாகும். அது போன்ற சமயங்களில் உங்களுடைய பவுலர்களுக்கு ஓய்வு கொடுத்து எப்படி பதிலளிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டுமென ராகுல் டிராவிட் பாய் எப்போதும் சொல்வார். ஆனால் அந்த வாய்ப்பைப் பெறாத இங்கிலாந்து பவுலர்கள் களத்தில் வைத்து 200 ரன்களை கட்டுப்படுத்துவதற்கான நேரத்தையும் வாய்ப்பையும் பெறவில்லை”
இதையும் படிங்க: ஆஸிக்கு 17.35 கோடி நஷ்டம்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. டிராவிஸ் ஹெட் கலகலப்பான பேட்டி
“டெஸ்ட் பேட்டிங் என்பது ஸ்ட்ரைக்ரேட்டை பற்றியது கிடையாது. உங்களுடைய சொந்த பவுலிங் அட்டாக்கை பாதுகாப்பது பற்றியதாகும். இங்கிலாந்து பவுலர்கள் அடுத்த நாளில் புத்துணர்ச்சியுடன் விளையாடும் உரிமையைப் பெற்றனர். ஆனால் அவர்களுடைய பேட்ஸ்மேன்களால் அவர்கள் மீண்டும் அதே நாளில் பற்றாகுறையான 200 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்” என்று கூறினார்.



