
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 15 வருடங்கள் கழித்து இந்தியாவில் வெற்றி பெற்ற அந்த அணி 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது. அதைத் தொடர்ந்து 2வது போட்டி நவம்பர் 22 ஆம் தேதி அசாம் மாநிலம் கௌஹாத்தியில் 9 மணிக்கு துவங்கியது.
அப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. அந்த சூழ்நிலையில் மீண்டும் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு 82 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ஐடன் மார்க்கம் 38 ரன்னில் பும்ரா வேகத்தில் க்ளீன் போல்ட்டானார்.
அடுத்த ஓவரிலேயே மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த ரியன் ரிக்கல்டன் 35 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் தெம்பா பவுமா – ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள். 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் கேப்டன் பவுமா 41 ரன்னில் ஜடேஜா சுழலில் சிக்கினார்.
மறுபுறம் அரை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டப்ஸ் 49 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். அதோடு நிற்காத குல்தீப் அடுத்து வந்த வியான் முல்தாரையும் 13 ரன்னில் அவுட்டாக்கினார். மறுபுறம் நிதானத்தைக் காட்ட முயற்சித்த டோனி டீ ஜோர்சி 28 ரன்னில் சிராஜ் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் தெனாப்பிரிக்கா 247/6 ரன்கள் எடுத்துள்ளது. அதனால் நாளைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 300 ரன்களுக்குள் இந்தியா ஆல் அவுட்டாக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் முறையே மார்க்ரம் 38, ரிக்கல்டன் 35, ஸ்டப்ஸ் 49, பவுமா 41 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க: 69 பந்தில் 100.. இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட்.. 148 ஸ்ட்ரைக் ரேட்டில் 3 உலக சாதனை
அப்படி நல்ல துவக்கத்தைப் பெற்ற அவர்களில் யாருமே அரை சதத்தைத் தொடவில்லை. இதன் வாயிலாக முதல் முறையாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் டாப் 4 பேட்ஸ்மேன்களும் 35+ ரன்கள் எடுத்துள்ளார்கள். ஆனால் அவர்களில் யாருமே 50 ரன்கள் தொடாத அரிய நிகழ்வு இப்போட்டியில் அரங்கேறியுள்ளது. இதற்கு முன் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் குறைந்தது 35 ரன்கள் அடித்த டாப் 4 பேட்ஸ்மேன்களில் யாருமே 50 ரன்கள் தொடாமல் இருந்ததில்லை.