69 பந்தில் 100.. இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட்.. 148 ஸ்ட்ரைக் ரேட்டில் 3 உலக சாதனை

Travis Head
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடர் நவம்பர் 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. அப்போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 172, ஆஸ்திரேலியா 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்தளவுக்கு பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருந்த பிட்ச்சில் 2வது இன்னிங்ஸில் 40 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து 164 ரன்களை மட்டுமே எடுத்தது. இறுதியில் 205 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா கடினமான பிட்ச்சில் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கே வித்தியாசமாக சிந்தித்த ஆஸ்திரேலியா தங்களுடைய அதிரடி நாயகன் டிராவிஸ் ஹெட்டை சொந்த மண்ணில் முதல் முறையாக ஓப்பனிங்கில் களமிறக்கியது.

- Advertisement -

அடித்து நொறுக்கிய ஹெட்:

அந்த வாய்ப்பில் இங்கிலாந்தை பந்தாடிய அவர் 36 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். தொடர்ந்து அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 69 பந்துகளில் சதத்தை அடித்து 16 பவுண்டரி 4 சிக்ஸருடன் 123 (83) ரன்களை 148.19 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி போட்டியை முடித்தார். அவருடன் லபுஸ்ஷேன் 51*, வெதர்லேண்ட் 23 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற உதவினார்கள்.

இப்போட்டியில் 69 பந்துகளில் 100 ரன்கள் அடித்ததன் வாயிலாக ஆஷஸ் தொடரில் 2வது வேகமான சதத்தை அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற ஜோ டார்லிங்கின் 127 சாதனையை உடைத்த ஹெட் புதிய சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் (பந்துகள்):
1. ஆடம் கில்கிறிஸ்ட்: 57, பெர்த், 2006
2. டிராவிஸ் ஹெட்: 69, பெர்த், 2025*
3.ஜோ டார்லிங்: 85, சிட்னி, 1898

- Advertisement -

3 உலக சாதனை:

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வேகமான சதத்தை அடித்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை டிராவிஸ் ஹெட் சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2012ஆம் ஆண்டு பெர்த் வாக்கா மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னரும் 69 பந்துகளில் சதத்தை அடித்துள்ளார்.

மேலும் ஒரு டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையை ஹெட் படைத்துள்ளார். இதற்கு முன் 1902 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் கில்பர்ட் ஜெஸோப் 4வது இன்னிங்ஸில் 76 பந்துகளில் சதம் அடித்ததே முந்தைய சாதனை. அந்த 123 வருட சாதனையை தற்போது ஹெட் உடைத்துள்ளார்.

இதையும் படிங்க: 28.2 ஓவரில் 205 ரன்ஸ்.. பஸ்பாலை பொளந்த ஹெட்.. 104 வருடத்துக்கு பின் 2 நாளில் ஆஸி சாதனை வெற்றி

இது மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட 4வது இன்னிங்ஸில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை (148.19) கொண்ட வீரர் என்ற உலக சாதனையையும் ஹெட் படைத்துள்ளார். இதற்கு முன் 2022ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ 147.87 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதே முந்தைய சாதனை.

Advertisement