வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி துவங்கியது. போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து தங்களுடைய பேட்டிங்கை துவங்கிய தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 357 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் தெம்பா பவுமா நங்கூரமாக விளையாடி அதிகபட்சமாக 86 ரன்கள் குவித்தார். அவருடன் டானி டீ ஜோர்சி 78, வியன் முல்தார் 41*, கெய்ல் வேரின் 39 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்காவுக்கு கை கொடுத்தனர்.
மழை காப்பாற்றுமா:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக வேரிக்கன் 4, ஜெய்டேன் சீல்ஸ் 3, கீமர் ரோச் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 35, மைக்லே லூயிஸ் 35, கேசி கார்ட்டி 42 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்து அவுட்டானார்கள். அதனால் 145/4 என்ற நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போது குறுக்கே வந்த மழை 4வது நாளின் முக்கால்வாசி ஆட்டத்தை நிறுத்தியது. இருப்பினும் தேநீர் இடைவெளிக்கு பின் மழை விட்டதால் மீண்டும் துவங்கிய போட்டியில் தென்னாப்பிரிக்க பவுலர்கள் அபாரமாக பந்து வீசினர். அதற்கு தாக்குபிடிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்ட 36, காவெம் ஹோட்ஜ் 25 ரன்களில் அவுட்டாகி சென்றனர்.
அடுத்ததாக வந்த ஜோஸ்வா டா சில்வா 1, கீமார் ரோச் 8, மோட்டி 0, ஜெய்டேன் சீப்ஸ் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் வேரிக்கன் 35* (32) ரன்கள் எடுத்தும் வெஸ்ட் இண்டீஸை 233 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா சுருட்டியது. குறிப்பாக 145/4 என்ற நிலையில் இருந்த அந்த அணியை அடுத்த 30 ஓவருக்குள் 233 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4, ரபாடா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதையும் படிங்க: விராட் கோலிக்கு சப்போர்ட் பண்ணல.. ஆனா தோல்வியால் இந்தியா கவலைப்பட வேண்டியதில்ல.. டிகே சொல்லும் காரணம்
அதன் பின் 134 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 4வது நாள் முடிவில் 30/0 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு களத்தில் டீ ஜோர்சி 14*, ஐடன் மார்க்ரம் 9* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் தென்னாப்பிரிக்கா 154 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க ஒன்று மழை வந்து காப்பாற்ற வேண்டும் அல்லது தாங்களே போராடி டிரா செய்ய வேண்டும் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது.



