இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது. அதனால் 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரில் இந்தியா வீழ்ந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருக்கும் இந்தியா ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக உள்ளது.
அப்படியிருந்தும் சுழலுக்கு சாதகமான கொழும்பு ஆடுகளத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் வரலாற்றுத் தோல்வியை சந்தித்த இந்திய அணி சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டதா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அத்துடன் அடுத்ததாக 2025இல் தான் இந்தியா ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
கவலை வேண்டாம்:
எனவே அதற்குள் எப்படி தயாராகி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா விளையாட முடியும் என்ற கவலையும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அந்தத் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தம்முடைய கேரியரிலேயே முதல் முறையாக ஸ்பின்னர்களிடம் தொடர்ந்து 3 முறை அவுட்டாகி தோல்விக்கு காரணமானார்.
அதனால் விராட் கோலியும் சுழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டாரா என்று ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் சுழலுக்கு அதிக சாதகமாக இருந்த கொழும்பு மைதானத்தில் 2வது இன்னிங்ஸில் யாருமே வெற்றிகரமாக பேட்டிங் செய்திருக்க முடியாது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். எனவே விராட் கோலியின் ஆட்டத்தை நினைத்து ரசிகர்கள் கவலையடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் ஒருவேளை டாஸ் நமக்கு கிடைத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்திருந்தால் இலங்கைக்கும் அதே நிலைமை தான் என்றும் தினேஷ் கார்த்திக் மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா அல்லது யாராக இருந்தாலும் அசத்தியிருக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: ஒரே ஓவரில் 6, 6, 6, 6, 6.. ஹண்ட்ரட் தொடரில் ரசித் கானை பொளந்த பொல்லார்ட்.. கடைசியில் கைமாறிய வெற்றி
“ஏனெனில் அங்கே கொஞ்சம் தேய்ந்த புதிய பந்தில் 8 – 30 வரையிலான ஓவர்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். எனவே அதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. உலகில் பெரும்பாலான பிட்ச்கள் அப்படி வேலை செய்யாது. இன்னும் அது ஸ்பின்னர்களை விளையாடுவதற்கு கடினமானதாக இருந்தது. இங்கே நான் விராட் கோலிக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் கொழும்புவில் இம்முறை சுழலை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது” என்று கூறினார்.



