தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 27ஆம் தேதி டர்பன் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை அடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 70 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கைக்கு அதிகபட்சமாக லஹிரு குமரா 3, அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இலங்கை மிகவும் மோசமாக பேட்டிங் செய்து 42 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா அசத்தல்:
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 50 ரன்களுக்குள் அவுட்டாகி இலங்கை மோசமான சாதனை படைத்தது. அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்கோ யான்சென் 6.5 ஓவரில் 13 ரன்கள் மட்டும் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை எடுத்து தெறிக்க விட்டார்.
பின்னர் முன்னிலையுடன் விளையாடிய தென்னாபிரிக்கா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 366-5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா சதத்தை அடித்து 113, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் சதத்தை அடித்து 122 ரன்கள் குவித்தார்கள். இலங்கை அணிக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா விஷ்வா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இந்தியாவுக்கு போட்டி:
இறுதியில் 516 ரன்களை துரத்திய இலங்கை அணி முடிந்தளவுக்கு போராடியும் 282 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 83, கேப்டன் டீ சில்வா 59, குசால் மெண்டிஸ் 48 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மீண்டும் மார்கோ யான்சென் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 233 ரன்களை வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ரன்கள் அடிப்படையில் தங்களுடைய இரண்டாவது பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
இதையும் படிங்க: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் அவரை சேருங்க – சுனில் கவாஸ்கர் கருத்து
இதற்கு முன் 2016ஆம் ஆண்டு 206 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியாவை (57.69%) பின்னுக்கு தள்ளிய தென்னாபிரிக்கா 59.26% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. அந்த வகையில் 61.11% முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு போட்டியாக தென்னாப்பிரிக்காவும் வருகிறது.