
ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 28ஆம் தேதி புலவாயோ நகரில் துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கேசவ் மகாராஜா தலைமையிலான இளம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 418/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணிக்கு டீ ஜோர்சி 0, மைக்கேல் பிரட்ஸ்கே 13, வியன் முல்தார் 17, டேவிட் பேடிங்கம் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அதனால் 55/4 என தடுமாறிய தென்னாப்பிரிக்காவுக்கு மிடில் ஆர்டரில் அறிமுக வீரர் லுஹன்-டிரே பிரிடோரிஸ் சதத்தை அடித்து 153 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகப் போட்டியில் மிகவும் இளம் வயதில் வேகமாக சத்தத்தை அடித்த வீரர் என்ற 2 சாதனையையும் அவர் படைத்தார். அவருடன் அறிமுகமான மற்றொரு வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் 51 (41) ரன்களை அடித்து அசத்தினார்.
லோயர் மிடில் ஆர்டரில் கோர்பின் போஸ் தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து 100* ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்காவை வலுப்படுத்தினார். ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக தனாகா சிவங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணியை சிறப்பாக பவுலிங் செய்த தென்னாபிரிக்கா 251 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் தனியாளாக போராடி சதத்தை அடித்து 137 ரன்கள் எடுத்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் யாரையும் 40 ரன்கள் கூட தாண்ட விடாத தென்னாப்பிரிக்காவுக்கு வியான் முல்தர் 4, கேப்டன் கேசவ் மகராஜ் 3, கோடி யூசுஃப் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக 168 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா 2வது இன்னிங்ஸில் 369 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக வியான் முல்தார் சதத்தை அடித்து 147, கேப்டன் கேசவ் மகாராஜ் 51 ரன்களை எடுத்தார்கள்.
தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக வெலிங்டன் மசகட்சா 4 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 537 என்ற மெகா இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியை மீண்டும் அபாரமாக பவுலிங் செய்த தென்னாப்பிரிக்கா 208க்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக கேப்டன் கிரைக் எர்வின் 49, வெலிங்டன் மசகட்சா 57 ரன்களை எடுத்தார்கள்.
இதையும் படிங்க: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 3 மாற்றங்கள் – விவரம் இதோ
தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கோர்பின் போஸ் 5, கோடி யூசுப் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அதனால் 328 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா 1 – 0* (2) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக பெரிய வெற்றியைப் பெற்ற அணி என்ற உலக சாதனையையும் படைத்தது. இதற்கு முன் 2002 கால்லே போட்டியில் ஜிம்பாப்வேவை 315 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்ததே முந்தைய பெரிய வெற்றியாகும்.