ஐக்கிய அரபு நாடுகளில் அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்காவை 2வது போட்டியில் அயர்லாந்து வீழ்த்தியது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து அயர்லாந்து புதிய சாதனை படைத்து தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் சமன் செய்தது.
அதைத்தொடர்ந்து அவ்விரு அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. அத்தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில் 2வது போட்டி அக்டோபர் நான்காம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரியான் ரிக்கல்டன் 40 (38) ரன்களில் அவுட்டானார்.
ஸ்டப்ஸ் அதிரடி:
அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் பவுமா 35 (39) ரன்கள் எடுத்திருந்த போது காயமடைந்து வெளியேறினார். அதே போல மூன்றாவது இடத்தில் விளையாடிய ராசி வேன் டெர் டுஷன் 35 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் மிடில் ஆர்டரில் ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் – கெய்ல் வேர்ரின் ஜோடி சேர்ந்து அயர்லாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டனர்.
4வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் கெய்ல் வேர்ரின் அரை சதுமடித்து 67 (64) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அயர்லாந்து பவுலர்களை துவம்சம் செய்து அதிரடியாக விளையாடிய இளம் வீரர் ஸ்டப்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை அடித்து 8 பவுண்டரி 3 சிக்சருடன் 112* (81) ரன்களை 138.27 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார்.
பதிலடி வெற்றி:
இறுதியில் வியான் முல்தர் 43 (34) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் தென்னாபிரிக்கா 343-4 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து 344 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு ஆண்டி பால்பரின் 1, கேப்டன் பால் ஸ்டெர்லிங் 5 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர். அதே போல மிடில் ஆர்டரில் குர்ட்டிஸ் கேம்பர் 17, ஹரி டெக்டர் 20, ஜார்ஜ் டாக்ரெல் 11, மார்க் அடைர் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இதையும் படிங்க: இதுக்காக வாழ்த்துறேன்.. தோனி அளவுக்கு வரமுடியாது.. ஆனா கம்பீரும் என்னோட சகோதரர் தான்.. கம்ரான் அக்மல்
இறுதியில் கிரைக் எங் 29* (21), காவின் ஹோய் 23, கிரகாம் 21 ரன்கள் எடுத்துப் போராடியும் 30.3 ஓவரில் அயர்லாந்தை 169 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா 174 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ள தென்னாபிரிக்கா டி20 தொடரில் வரலாறு காணாத தோல்வியை பரிசளித்த அயர்லாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக லிசாட் வில்லியம்ஸ் 3, லுங்கி நிகிடி 2, பிஜோர்ன் போர்ட்சுன் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.



