இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சாகித் அப்ரிடி, கம்ரான் அக்மல் போன்ற பாகிஸ்தான் வீரர்களுடன் கௌதம் கம்பீர் சண்டையிட்ட தருணங்களை மறக்க முடியாது. சொல்லப்போனால் ஒரே மாநிலத்தில் பிறந்து நாட்டுக்காக விளையாடிய விராட் கோலியுடன் 2013, 2023 ஐபிஎல் தொடர்களில் கௌதம் கம்பீர் வாக்குவாதம் செய்தார்.
அதே சமயம் திறமைக்கு பஞ்சம் இல்லாத கௌதம் கம்பீர் 2007 டி20 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை தோனி தலைமையில் இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார். மேலும் கேப்டனாக 2 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள அவர் 2024 சீசனில் ஆலோசகராக கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார். அதனால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூலான தோனி:
அவருடைய தலைமையில் இலங்கை டி20 தொடரில் வெற்றி கண்ட இந்தியா ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்றது. இருப்பினும் அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா அதிரடி வெற்றி பெற்றது. இந்நிலையில் எம்எஸ் தோனி போல மென்மையானவர் கிடையாது என்றாலும் கௌதம் கம்பீரும் தம்முடைய சகோதரர் போன்றவர் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியதற்கு பின்வருமாறு. “எம்எஸ் தோனி வித்தியாசமான மனநிலை கொண்டவர் என்பதில் சந்தேகம் இல்லை. மிகவும் பொறுமையாக இருக்கக்கூடிய அவர் அற்புதமான மேட்ச் வின்னர். அற்புதமாக விளையாடிய அவர் சிறந்த கேரியரை கொண்டிருந்தார். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் பற்றி நிறைய பேசுவோம்”
கம்பீரும் நண்பர் தான்:
“தோனியிடம் நீங்கள் எப்போதுமே நன்றாக பேசலாம். கௌதம் கம்பீரிடமும் நல்ல உறவு இருக்கிறது. அதாவது நானும் அவரும் நல்ல நண்பர்கள். சொல்லப்போனால் பயிற்சியாளராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வெற்றியைப் பதிவு செய்துள்ள அவருக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஐசிசி 2024 மகளிர் டி20 உ.கோ : 58 ரன்ஸ்.. இந்தியா சொதப்பல்.. 10 தொடர் தோல்விகளை தூளாக்கிய நியூஸிலாந்து
முன்னதாக அணியின் வெற்றிக்காக களத்தில் மட்டுமே சண்டையிடுவேன் என்று தெரிவித்த கம்பீர் களத்திற்கு வெளியே யாரிடமும் வாக்குவாதம் செய்வதில்லை எனக் கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது பயிற்சியாளராக வந்ததும் அவர் விராட் கோலியுடன் சேர்ந்து பயணிக்கத் துவங்கியுள்ளார். அடுத்ததாக வங்கதேச டி20 கிரிக்கெட் தொடரில் அவர் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.