131க்கு ஆல் அவுட்.. போராடிய விராட் கோலி.. மீண்டும் தெ.ஆ மண்ணில் இந்தியா சரித்திரத்தை தவற விட்டது எப்படி?

IND vs RSA 1st Test
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்து அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்றது. அதைத்தொடர்ந்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் சென்சூரியன் நகரில் தொடங்கியது.

அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா கடுமையாக போராடி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோகித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 17, கில் 2, விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் சதமடித்து 101 ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார்.

- Advertisement -

தவற விட்ட இந்தியா:
தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5, நன்ரே பர்கர் 3 விக்கெட்களை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு ஐடன் மார்க்ரம் 5, டீ ஜோர்சி 28, கீகன் பீட்டர்சன் 2, கேவின் வெரின் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் தம்முடைய கடைசி தொடரில் அபாரமாக விளையாடிய துவக்க வீரர் டீன் எல்கர் சதமடித்து 185 ரன்களும் மார்கோ யான்சன் 84* ரன்களும் குவித்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4, முகமது சிராஜ் 2 விக்கெட்களை சாய்த்தார்கள். அதைத்தொடர்ந்து 164 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 0, ஜெய்ஸ்வால் 5, சுப்மன் கில் 26, ஸ்ரேயாஸ் ஐயர் 6, கேஎல் ராகுல் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மீண்டும் தென்னாபிரிக்காவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் ஒருபுறம் விராட் கோலி முடிந்தளவுக்கு கடுமையாக போராடி அரை சதம் கடந்து 76 ரன்கள் எடுத்த போதிலும் எதிர்ப்புறம் வந்த வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைப்பதற்கான வாய்ப்பை மீண்டும் இந்தியா தவற விட்டது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: ஒழுங்கா உள்ள நில்லு.. இல்லனா அவுட் பண்ணிடுவேன்.. தெ.ஆ வீரருக்கு வார்னிங் குடுத்த – ரவிச்சந்திரன் அஷ்வின்

இப்போட்டியில் ராகுல், விராட் கோலி ஆகியோரை தவிர்த்து இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு காரணமானது. அதை விட முகமது ஷமிக்கு பதிலாக அறிமுகமாக வாய்ப்பு பெற்ற பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்கிள் தாக்கூர் ஆகியோர் பந்து வீச்சில் ரன்கள் வாரி வழங்கியது படுதோல்வியை பரிசளித்தது. மறுபுறம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் இந்தியாவிடம் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இம்முறையும் தக்க வைத்து ஆரம்பத்திலேயே 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர் 4, ரபாடா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Advertisement