ENG vs RSA : சொன்னதை செய்து காட்டிய தெ.ஆ – இங்கிலாந்தை நொறுக்கி மாஸ் வெற்றி, குவியும் வாழ்த்துக்கள்

ENG vs RSA JOE ROOT Nigidi
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று துவங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் சமீபத்தில் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் புத்துயிர் பெற்று அதிரடியாக விளையாடும் புதிய இங்கிலாந்து வெல்லும் அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வெளிப்படையாகவே பேசினார்கள்.

குறிப்பாக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் அதிரடியாக விளையாடி ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்தியாவை கடைசி இன்னிங்சில் 378 ரன்களை அசால்டாக சேஸிங் செய்து தோற்கடித்து 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்ததை போல இந்த தொடரிலும் தென் ஆப்பிரிக்காவை மண்ணைக் கவ்வ வைக்கும் என்று வெளிப்படையாகவே சவால் விட்டனர்.

- Advertisement -

பயப்படாத தென்ஆப்பிரிக்கா:
ஆனால் இந்த வாய்த்த சவடாலுக்கு அஞ்சாத தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் “பஸ்பால் எனப்படும் இங்கிலாந்தின் பாதை அதிரடியாக இருந்தாலும் நீண்ட காலம் நீடிக்க முடியாது” என்று போட்டி துவங்குவதற்கு முன்பாக எச்சரித்தார். “இதை நாங்கள் பஸ்பால் என்று அழைக்கப்போவதில்லை, இது முற்றிலும் வித்தியாசமான முட்டாள்தனமான மொழி” எனக்கூறிய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்றிச் நோர்ட்ஜே சூட்டை மேலும் கிளப்பினார். அதுபோக “பஸ்பால் என்பது எதுவும் கிடையாது, போட்டி நாளன்று யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம்” என்று தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்தார்.

ஆனால் “5.74 என்ற ரன் ரேட்டில் சமீபத்தில் நாங்கள் வென்றோம், அதைப் புறக்கணிப்பது உங்களின் முட்டாள்தனம்” என்று தென் ஆப்ரிக்காவின் இந்தக் கருத்துகளுக்கு இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் பதிலடி கொடுத்தார். அத்துடன் “பஸ்பால்” எனப்படும் எங்களுடைய அதிரடி தென் ஆப்பிரிக்காவின் மனதில் ஓடிக்கொண்டே இருப்பதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கலாய்த்தார். இப்படி போட்டித் துவங்குவதற்கு முன்பாகவே இரு அணிகளும் ஆக்ரோசமான வார்த்தைப் போரில் ஈடுபட்டது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது.

- Advertisement -

தெறிக்கவிட்ட தென்ஆப்பிரிக்கா:
அந்த நிலைமையில் உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்து மிரட்டலான பந்துவீசி இங்கிலாந்தை கதற விட்டது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் காகிசோ ரபாடா மட்டும் 5 விக்கெட்களை சாய்த்து மிரட்டலாக பந்துவீச அவருடன் ஜோடி சேர்ந்த அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்களும் மார்கோ யான்சென் 2 விக்கெட்டுகளும் எடுத்து இங்கிலாந்தை வெறும் 165 ரன்களுக்கு சுருட்டினர்.

அவர்களின் மிரட்டலான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் லீஸ் 5, கிராவ்லி 8, ஜோ ரூட் 8, ஜானி பேர்ஸ்டோ 0, பென் ஸ்டோக்ஸ் 20 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ஓலி போப் 73 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து தனது தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் டீன் எல்கர் – எர்வீ ஆகியோர் 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தபோது எல்கர் 47 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அவருடன் பேட்டிங் செய்த எர்வீ 73 ரன்களில் ஆட்டமிழக்க மிடில் ஆர்டரில் பீட்டர்சன் 24, மார்க்ரம் 16, வேன் டெர் டுஷன் 19 போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மார்கோ யான்சென் 48, கேசவ் மகாராஜ் 41 என நல்ல ரன்களை எடுத்து காப்பாற்றியதால் தப்பிய தென் ஆப்பிரிக்கா 326 ரன்கள் எடுத்தது.

குவியும் வாழ்த்துக்கள்:
அதனால் 161 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தை அதிரடி காட்ட விடாமல் மேலும் அட்டகாசமாக பந்து வீசிய தென்ஆப்பிரிக்கா லீஸ் 35, போப் 5, ரூட் 6, பேர்ஸ்டோ 18, ஸ்டோக்ஸ் 20 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரையும் மீண்டும் சொற்ப ரன்களில் காலி செய்து வெறும் 149 ரன்களுக்கு சுருட்டியது. தென்னாபிரிக்கா சார்பில் பந்துவீச்சில் ரபாடா, யான்சென், கேசவ் மகாராஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்டுகளை சாய்த்து இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்ய முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

இந்த போட்டியின் முடிவில் “இங்கிலாந்து வெற்றிக்கு அதிரடியாக போராடும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் இவ்வளவு சீக்கிரம் தோற்பார்கள் என எதிர்பார்க்கவில்லை” என்று பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் ஆரம்பத்தில் சொன்னதை களத்தில் அபாரமாக செயல்பட்டு வெறும் 3 நாட்களில் முரட்டுத்தனமான இங்கிலாந்தை தோற்கடித்தது உலக அளவில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க : IND vs ZIM : 2 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நட்சத்திர வீரர் – பிளேயிங் லெவன் இதோ

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வெற்றியால் 1 – 0* (3) என தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கும் இந்தத் தொடரின் 2வது போட்டி ஆகஸ்ட் 25இல் துவங்குகிறது.

Advertisement