
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்பாப்பிரிக்கா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 2வது போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி டார்வின் நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 2.45 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் மார்க்ரம் 18, ரிக்கல்டன் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் அடுத்து வந்த தேவால்ட் ப்ரேவிஸ் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார். எதிர்ப்புறம் ட்ரே பிரிட்டோரியஸ் 10 ரன்களில் அவுட்டானார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ப்ரேவிஸ் 25 பந்துகளில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்தார்.
அவருடன் எதிர்புறம் கைகோர்த்த திரிஷ்டன் ஸ்டப்ஸ் 31 (22) ரன்கள் விளாசி அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 12வது ஓவரில் மேக்ஸ்வெலுக்கு எதிராக 6, 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்து 41 பந்துகளில் சதத்தை அடித்தார். எதிர்புறம் வந்த டுஷன் 5, கோர்பின் போஸ்க் 0 ரன்களில் அவுட்டானார்கள்.
மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய ப்ரேவிஸ் 12 பௌண்டரி 8 சிக்ஸர்களுடன் 125* (56) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் தென்னாபிரிக்கா 218/7 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 2, பென் ட்வார்சுய்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் 5, கேமரூன் க்ரீன் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அதே போல மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் 22 (13) ரன்களில் அவுட்டானார். மிடில் ஆடரில் டிம் டேவிட் அடித்து நொறுக்கி 50 (24) ரன்களை எடுத்து விக்கட்டை இழந்தார். ஆனால் லோயர் ஆர்டரில் மேக்ஸ்வெல் 16, மிட்சேல் ஓவன் 8, அலெக்ஸ் கேரி 26 ரன்கள் எடுத்த போதிலும் ஃபினிஷிங் செய்ய தவறினார்கள். இறுதியில் ஆஸ்திரேலியாவை 17.4 ஓவரில் 165 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா இத்தொடரை சமன் செய்து ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2018 கான்பேரா போட்டியில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே தென்னாப்பிரிக்காவின் முந்தைய பெரிய வெற்றி.
இதையும் படிங்க: கருண் நாயரும் வேணாம்.. சாய் சுதர்சனும் வேணாம்.. 3 ஆம் இடத்தில் அவரை ட்ரை பண்ணுங்க – கங்குலி கருத்து
அத்துடன் கடைசியாக விளையாடிய 9 டி20 போட்டிகளில் வெற்றிகளை மட்டுமே பெற்று வந்த ஆஸ்திரேலியாவின் வெற்றி நடையை தென்னாபிரிக்கா உடைத்துள்ளது. அது போக கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 7 டி20 போட்டிகளில் சந்தித்த 7 தொடர்ச்சியான தோல்விகளை தென்னாப்பிரிக்கா நிறுத்தியுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கோர்பின் போஸ் மற்றும் கேனா மாபாகா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.